» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
உலகக் கோப்பை கால்பந்து: கால்இறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து!
செவ்வாய் 7, ஜூலை 2026 8:58:47 AM (IST)

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் பரபரப்பான 3-வது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்திக் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளது.
மெக்சிகோ சிட்டியில் உள்ள அஸ்டெக் ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டம், மோசமான வானிலை காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. ஆரம்பத்தில் மெக்சிகோ அணி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், இங்கிலாந்து அணி பதில் தாக்குதலைத் தொடுத்தது. ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் புகயோ சகா கொடுத்த பந்தை ஜூட் பெல்லிங்ஹாம் தலையால் முட்டி முதல் கோலாக்கினார்.
அடுத்த 2 நிமிடங்களுக்குள் கேப்டன் ஹாரி கேன் கடத்திக் கொடுத்த பந்தை மீண்டும் ஜூட் பெல்லிங்ஹாம் கோல் வலைக்குள் திருப்பி இங்கிலாந்தை 2-0 என முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து ஆவேசமாக ஆடிய மெக்சிகோ அணியின் முன்கள வீரர் ஜூலியன் குயின்னோஸ் 42-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில், 54-வது நிமிடத்தில் இங்கிலாந்து பின்கள வீரர் ஜாரெல் குவான்சா முரட்டு ஆட்டம் காரணமாக வீடியோ நடுவர் உதவியுடன் பிரதான நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் இங்கிலாந்து அணி 10 வீரர்களுடன் ஆடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. எனினும் 60-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் கோலடித்துத் தங்களது முன்னிலையை 3-1 என வலுப்படுத்தினார். பின்னர் 69-வது நிமிடத்தில் மெக்சிகோவுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரவுல் ஜிமெனெஸ் கோலாக்கினார்.
ஆட்டம் 3-2 என்ற கணக்கை எட்டியதும், மெக்சிகோ மேலும் ஒரு கோல் அடிக்கக் கடுமையாகப் போராடியது. ஆனால் ஒரு வீரர் குறைவாக இருந்த போதிலும் தீரத்தோடு ஆடிய இங்கிலாந்து அணி, தங்களது நேர்த்தியான தற்காப்பு ஆட்டத்தால் எதிரணியின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டது.
முடிவில் இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று 11-வது முறையாகக் கால்இறுதிக்கு முன்னேறியது. இந்தத் தோல்வியின் மூலம் மெக்சிகோ அணி 1986-ஆம் ஆண்டுக்குப் பிறகு கால்இறுதிக்குள் நுழைந்ததில்லை என்ற சோகம் தொடருகிறது. இங்கிலாந்து அணி தங்களது கால்இறுதி ஆட்டத்தில் நார்வேயைச் சந்திக்கிறது. இந்த ஆட்டம் வருகிற 12-ஆம் தேதி மியாமியில் இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு நடக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுதர் சுழலில் சிக்கிய இலங்கை: காலே டெஸ்ட்டில் 165 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:42:33 PM (IST)

வெறும் ₹100-க்கு ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப்பை விற்பனை செய்த டாடா ஸ்டீல்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 5:24:48 PM (IST)

வயது முக்கியமல்ல, திறமைதான் முக்கியம்: வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரெட் லீ பாராட்டு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:14:44 PM (IST)

காமன்வெல்த் விளையாட்டு: மும்முறை தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று தமிழக வீரர்கள் அசத்தல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:59:47 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜின்கியா ரஹானே ஓய்வு: வீடியோ வெளியிட்டு உருக்கம்!
வியாழன் 30, ஜூலை 2026 4:44:14 PM (IST)

காமன்வெல்த் போட்டி 2026: இந்திய வீரர்கள் சாதனை!
புதன் 29, ஜூலை 2026 11:18:45 AM (IST)


