» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அக்‌ஷர் அசத்தல்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி!

புதன் 15, ஜூலை 2026 8:53:59 AM (IST)

AxarWashington.jpg

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 47.5 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 76 ரன்களுடனும், லியாம் டாசன் 68 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஹாரி புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 150-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். 

இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியப் பவுலர் என்ற ரவீந்திர ஜடேஜாவின் சாதனையை பும்ரா முறியடித்தார். இந்தியத் தரப்பில் அக்‌ஷர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், குர்னூர் பிரார், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா 11 ரன்களிலும், 6 மாத இடைவெளிக்குப் பிறகு சர்வதேசப் போட்டிக்குத் திரும்பிய விராட் கோலி 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் (35 ரன்), கேப்டன் சுப்மன் கில் ஆகியோரது ஆட்டம் அணியை மீட்டது. சிறப்பாக விளையாடி 19-வது அரைசதம் கடந்த சுப்மன் கில் 80 ரன்கள் எடுத்திருந்த போது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த அக்‌ஷர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். வாஷிங்டன் சுந்தர் 52 ரன்களுடனும், அக்‌ஷர் பட்டேல் 57 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தனர். இந்திய அணி 45.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கார்டிப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory