» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரையை வீழ்த்தி 3-வது முறையாக கோவை கிங்ஸ் சாம்பியன்!

சனி 29, ஆகஸ்ட் 2026 8:46:51 AM (IST)

டி.என்.பி.எல். கிரிக்கெட் 2026 தொடரில் மதுரையை வீழ்த்தி 3-வது முறையாக கோவை கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

10-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் முன்னாள் சாம்பியன்களான கோவை கிங்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

'டாஸ்' வென்று முதலில் பேட்டிங் செய்த கோவை அணிக்கு ஆரம்பம் சீராக அமையவில்லை. லோகேஷ்வர் 11 ரன்களிலும், ராதாகிருஷ்ணன் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பி.சச்சின் மற்றும் ஆந்த்ரே சித்தார்த் இணைந்து அணியைச் சீரான பாதைக்குக் கொண்டு வந்தனர். அதிரடியாக ஆடிய ஆந்த்ரே சித்தார்த் 47 பந்துகளில் 82 ரன்கள் (7 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) விளாசினார். பி.சச்சின் 39 ரன்கள் எடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கோவை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. மதுரை தரப்பில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் பி.சரவணன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மதுரை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களான ராம்குமார் (0) மற்றும் சித்தார்த் மகாதேவன் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஹரிராகவேந்திரா (24 ரன்கள்), சதுர்வேத் (40 ரன்கள்) ஆகியோர் சற்று போராடிய போதிலும், முக்கியமான கட்டத்தில் விக்கெட்டைப் பறிக்கொடுத்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த மதுரை அணி, 14.2 ஓவர்களில் 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இதன் மூலம் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கோவை கிங்ஸ் அணி சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது. அத்துடன் லீக் சுற்றில் மதுரையிடம் அடைந்த தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. கோவை தரப்பில் எம்.சித்தார்த், ஷாருக்கான் தலா 3 விக்கெட்டுகளையும், தீபன் லிங்கேஷ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

கோவை அணி டி.என்.பி.எல். கோப்பையைக் கைப்பற்றுவது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளிலும் கோவை அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory