திருநெல்வேலியின் வரலாறு (8 of 14)

தென்காசி
 
வட்டத் தலைநகர். ஏறத்தாழ 1030 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. மழையளவு மிகுதி யாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. இதன் தொடர்ச்சியான மலைகளும், குன்றுகளும், பாறைகளும் இவ்வட்டமெங்கும் தென்படுகின்றன. தென்காசி வட்டத்தில்தான் குற்றாலம் அமைந்துள்ளது. பொருநையும், சிற்றுறும் பாசன வசதிக்கு உதவுகின்றன. அருவியும், சாரலும் இவ்வட்டத்திற்கு கிடைத்த நன்கொடைகள்.
 
கி.பி. 1445 இல் பிற்கால பாண்டியர்களால் கட்டப்பட்ட காசி விசுவநாதர் கோவில் இங்குண்டு. பத்துக் கைககள் கொண்ட நடராசர் சிலையும், 16 கைகள் கொண்ட திருஉருவமும் இக்கோயிலில் உண்டு. இக்கோவிலில் நுண்ணிய வேலைபாடு அதிகம். இங்கு ஐப்பசி, மாசி பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. வேளாண்மையும், நெசவுத் தொழிலும் நன்கு வளர்ந்து வருகின்றன. பட்டுப்பூச்சி வளர்க்கும் பண்ணை உள்ளது. சாயத்தொழிலும், நல்லெண்ணை வணிகமும், மரம் அறுக்கும் தொழிலும் நடை பெறுகின்றன. இங்குள்ள தோட்டங்களில் ரஸ்தாளி வாழப்பழம் மிகுதியாக விளைகிறது. மாம்பழ ஆராய்ச்சிப் பண்ணை ஒன்றும் செயல்படுகிறது.
 
அம்பா சமுத்திரம்
 
வட்டத் தலைநகர். பொதிகை மலையும், பொருநையாறும் அமைந்த வளமான ஊர். இவ்வட்டத்தின் பரப்பளவு 1280 ச.கி.மீ இரு பருவக்காற்றாலும் மழை பெறுகிறது. சில சமயம் 1500 மி.மீ. வரை பெய்வதுண்டு. இம்மாவட்டத்தின் ஆறுகள் அனைத்தும் இந்த வட்டத்தில் தான் தோன்றுகின்றன. இவ்வட்டத்தில் உள்ள மணிமுத்தாறு நகர அமைப்பு சிறப்பானது. இவ்வூர் செங்கோட்டை-திருநெல்வேலி இரயில் பாதையில் உள்ளது. இங்கு கல்வி, மருத்துவம், வட்ட அலுவலகங்கள், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் முதலியன உள்ளன.
 
அம்பாசமுத்திரம் 'அம்பை' என அழைக்கப்படுகிறது. இங்கு சீரான காலநிலை நிலவுவதால் உடல் நலத்திற்கு ஏற்ற ஊர். நெசவுக்கு பெயர்பெற்றது. இங்கு நெல் விளைச்சலும் மிகுதி. கேரளாவிற்கு நெல் ஏற்றுமதியாகிறது. மரவியாபாரம் சிறப்பான தொழில். குழந்தை விளையாட்டுப் பொருள்கள் செய்யப்படுகின்றன. கல்வி வளர்ச்சியில் இவ்வூர் முன்னணி வகிக்கிறது.


Favorite tags



Tirunelveli Business Directory