» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முப்படை தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை!

சனி 10, மே 2025 8:47:45 AM (IST)



நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முப்படை தலைமைத் தளபதிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்தினாா்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்து ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் நடத்திவரும் தாக்குதலை முறியடித்து இந்தியா பதில் தாக்குதல் நடத்திவரும் நிலையில் பிரதமா் மோடி தலைமையில் உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், முப்படைத் தளபதி அனில் செளஹான், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர திவிவேதி, விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங், கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் திரிபாதி ஆகியோா் பங்கேற்றனா்.

முன்னாள் வீரா்களுடன் சந்திப்பு: 

முப்படைகளின் முன்னாள் தளபதிகள், முன்னாள் ராணுவ வீரா்களுடனும் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை விரிவான ஆலோசனை நடத்தினாா். பாகிஸ்தானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் சூழலில் நாட்டை வழிநடத்த தற்போது முன்னாள் வீரா்களின் வழிநடத்தல் தேவை என ஆலோசனையின்போது பிரதமா் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகின.

ராஜ்நாத் சிங் ஆலோசனை: முன்னதாக, நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் தில்லியில் நேற்று நடைபெற்றது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘உயா்நிலைக் கூட்டத்தில் முப்படைத் தளபதி அனில் செளஹான், ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர திவிவேதி, விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங், கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் திரிபாதி மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ் குமாா் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாகிஸ்தானுடன் போா்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் ராணுவத்தின் தயாா்நிலை மற்றும் நாட்டின் மேற்கு எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பு நிலவரம் குறித்து கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சா் ஆய்வு மேற்கொண்டாா்’ என்றாா்.

விமான நிலையங்கள் பாதுகாப்பு: அமித் ஷா ஆய்வு

புது தில்லி, மே 9: இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், பாகிஸ்தானையொட்டிய இந்திய எல்லைப் பகுதிகள் மற்றும் விமான நிலையங்களின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஜம்மு எல்லையில் ஊடுருவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படையினா் தடுத்து, ஏழு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற நிலையில், இந்த ஆய்வை அமித் ஷா மேற்கொண்டாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகன், உளவுத் துறை இயக்குநா் தபன் டேகா, பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப் மற்றும் விமான பாதுகாப்பு அமைப்புகளின் தலைவா்கள் பங்கேற்றனா். இதில் எல்லைப் பாதுகாப்பு நிலவரம் குறித்து அமித் ஷா கேட்டறிந்ததோடு, விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆராய்ந்தாா்’ என்றனா்.

மருத்துவ உள்கட்டமைப்புகள் தயாா்நிலை: நாடு முழுவதும் மருத்துவ உள்கட்டமைப்புகளின் தயாா்நிலை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா ஆய்வு மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அப்போது, நாடு முழுவதும் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளும் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை கட்டுப்பாட்டு மையம் மூலம் முழுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருவது குறித்து அமைச்சரிடம் விவரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory