» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெங்களூருவில் அதிர்ச்சிச் சம்பவம்: முதியவரை கூரியரில் அனுப்ப முயன்ற குடும்பம்!
புதன் 18, மார்ச் 2026 5:52:45 PM (IST)

உகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆம்னி பஸ் கட்டணம் கிடுகிடுவென உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, பெங்களூருவில் ஒரு குடும்பத்தினர் தங்களது வீட்டு முதியவரைச் சாக்குப்பையில் மூட்டையாகக் கட்டி கூரியர் மூலம் அனுப்ப முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகத்தில் வியாழக்கிழமை உகாதி பண்டிகையும், சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்துத் தொடர்ச்சியாக 4 நாட்கள் அரசு விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் பெங்களூருவில் பணியாற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர்.
இதனைப் பயன்படுத்திக்கொண்ட ஆம்னி பஸ் உரிமையாளர்கள், கட்டணத்தை 2 முதல் 3 மடங்கு வரை உயர்த்தினர். இந்த அதீத கட்டண உயர்வால் ஆத்திரமடைந்த ஒரு குடும்பத்தினர், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஒரு விபரீதமான மற்றும் நூதன முறையைக் கையாண்டனர்.
தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவரைச் சாக்குப்பையில் வைத்து மூட்டையாகக் கட்டி, பெங்களூரு வயாலிகாவலில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றனர். அந்தப் பார்சலை ஊருக்கு அனுப்பி வைக்குமாறு அவர்கள் கூறியபோது, சந்தேகமடைந்த ஊழியர்கள் பார்சலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே ஒரு மனிதர் இருப்பதை அறிந்து உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், "பண்டிகை காலங்களில் பஸ் கட்டணம் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால், எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவே இந்த முறையைப் பின்பற்றினோம்" என அக்குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சாக்குப்பைக்குள் இருந்த முதியவருக்குச் சுவாசக் கோளாறு ஏற்பட்டு மூச்சுத்திணறல் உண்டானது. தனது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் இச்செயலுக்காக அக்குடும்பத்தினர் போலீசாரிடமும், பொதுமக்களிடமும் மன்னிப்பு கோரினர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "சாக்குப்பையில் ஒரு நபரை வைத்து மூட்டையாகக் கட்டி கொண்டு வந்தது மிகவும் தவறான செயல். இது அந்த நபரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும். இது ஒரு கடுமையான குற்றச்செயலாகும். இருப்பினும், குடும்பத்தினர் மன்னிப்பு கோரியதால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து அனுப்பியுள்ளோம்" எனத் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரை நூற்றாண்டு கால சகாப்தம் முடிவு: இந்தியாவில் இடதுசாரி ஆட்சியே இல்லாத சூழல்!
செவ்வாய் 5, மே 2026 11:24:49 AM (IST)

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி : வாக்காளர்களுக்கு பிரியங்கா காந்தி நன்றி!
செவ்வாய் 5, மே 2026 11:03:51 AM (IST)

மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழக்கிறார் மம்தா : பெரும்பான்மையை விட பாஜக முன்னிலை!
திங்கள் 4, மே 2026 12:03:55 PM (IST)

கேரளாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்? முதல்வர் பினராயி விஜயன் பின்னடைவு!
திங்கள் 4, மே 2026 11:58:26 AM (IST)

புனேவில் மக்கள் போராட்டம்: சிறுமி கொலை வழக்கில் விரைவு நீதிமன்ற விசாரணைக்கு முதல்வர் உத்தரவு!
ஞாயிறு 3, மே 2026 4:58:27 PM (IST)

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய நேரடி முதலீடு: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
ஞாயிறு 3, மே 2026 9:38:23 AM (IST)


