» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரள சட்டப்பேரவையில் வந்தே மாதரம் பாடாததால் சர்ச்சை: ஆளுநர் அதிருப்தி!

வெள்ளி 29, மே 2026 3:46:47 PM (IST)



கேரள மாநிலச் சட்டப்பேரவையில் 'வந்தே மாதரம்' பாடல் முழுமையாகப் பாடப்படாதது தொடர்பாக ஆளுநர் அர்லேகர் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

கேரளாவின் 16-ஆவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் முறைப்படி தொடங்கியது. அவையின் தொடக்க நிகழ்வின் போது, தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் தொடக்கப் பத்திகளை அங்கிருந்த இசைக்குழுவினர் வெறும் இசைக்குறிப்பாக மட்டுமே வாசித்தனர். 

பாடலாகப் பாடப்படாமல் வெறும் இசையாக மட்டுமே ஒலிக்கப்பட்டதற்கு அவையிலிருந்த பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் உடனடியாக தங்களது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை நிகழ்வுகளை முடித்துக் கொண்டு ஆளுநர் மாளிகைக்குத் திரும்பிய ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், இவ்விவகாரம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"ஆளுநர் அவையில் முன்னிலையாக இருக்கும் போதெல்லாம், தேசியப் பாடலான வந்தே மாதரம் முழுமையான வடிவில் பாடப்பட வேண்டும் என்பதே மரபு. ஆனால், இங்குப் பாடல் பாடப்படாமல் வெறும் இசையாக மட்டுமே ஒலிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது. இது குறித்துச் சபாநாயகர் திருவனூர் ராதாகிருஷ்ணனிடம் நேரில் பேசி எனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளேன். இப்பிரச்சினைக்கு உரிய முறையில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன். இனிவரும் நாட்களில் நிலைமை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்." என்று அவர் குறிப்பிட்டார்.

பினராயி விஜயன் வாதம்

இப்பிரச்சினை குறித்துச் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும், மாநில முன்னாள் முதலமைச்சருமான பினராயி விஜயன் ஆளுநரின் கருத்திற்கு முற்றிலும் மாறுபட்ட விளக்கத்தை அளித்தார். அவர் பேசுகையில், "வந்தே மாதரம் பாடலை எங்கும் எப்போதும் முழுமையாகப் பாட வேண்டிய அவசியம் இல்லை என்பது முன்னரே சட்டப்பூர்வமாகத் தெளிவுபடுத்தப்பட்ட ஒன்று. அந்தப் பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டும் பாடினால் போதுமானது. அதுமட்டுமன்றி, இப்பாரம்பரியப் பாடல் பாடப்படும் போது அவையில் இருப்பவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை கூடக் கிடையாது.

வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாட வலியுறுத்துவது என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும். முன்னதாக நடைபெற்ற பதவியேற்பு விழாவின் போது இப்பாடல் முழுமையாகப் பாடப்பட்டது தேவையற்றது; அது நடந்திருக்கக் கூடாது. அந்தப் கசப்பான அனுபவத்திற்குப் பிறகு மாநில அரசு தற்போதைய கடுமையான முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதுவே இவ்விவகாரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சரியான மற்றும் ஜனநாயக ரீதியிலான நிலைப்பாடு." என்று பினராயி விஜயன் அழுத்தமாகக் கூறினார். 

கேரளச் சட்டப்பேரவையின் முதல் நாளிலேயே தேசியப் பாடல் தொடர்பாக ஆளுநருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே வெடித்துள்ள இந்த அரசியல் மோதல், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory