» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவம் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு

வியாழன் 2, அக்டோபர் 2025 4:56:02 PM (IST)



பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாக்.  பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளை ரத்து செய்ய வேண்டும். வரிச் சலுகை, உணவு மற்றும் மின்சாரத்திற்கான மானியங்கள் வழங்க வேண்டும் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 38 கோரிக்கைகளை முன்வைத்து ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு தலைமையில் கடந்த 3 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மூன்றாவது நாளாக நீடித்த வன்முறையில், பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். அப்போது 12 பேர் கொல்லப்பட்டனர். டாடியாலில் தொடங்கி முசாபராபாத், ராவலகோட், நீலம் பள்ளத்தாக்கு மற்றும் கோட்லி வரை இந்த போராட்டங்கள் பரவியுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், முசாபராபாத்தில் ஐந்து போராட்டக்காரர்களும், தீர்கோட்டில் ஐந்து பேரும், தத்யாலில் இரண்டு போராட்டக்காரர்களும் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று காவல்துறையினரும் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

செப்டம்பர் 29 அன்று போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து சந்தைகள், கடைகள் மற்றும் உள்ளூர் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மொபைல், இணையம் மற்றும் லேண்ட்லைன் சேவைகளும் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. முசாபராபாத்தில் பேரணியைத் தடுக்க பாலங்களில் வைக்கப்பட்டிருந்த கற்களை வீசி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பெரிய கப்பல் கொள்கலன்களை கவிழ்க்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன.

நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கவும், அமைதியான தீர்வைக் காணவும் பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறினார்.

இதற்கிடையில், ஐக்கிய காஷ்மீர் மக்கள் தேசியக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நசீர் அஜீஸ் கான், இந்த விவகாரத்தில் அவசர தலையீட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory