» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரேசிலில் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் கைது

ஞாயிறு 23, நவம்பர் 2025 12:49:41 PM (IST)



பிரேசிலில் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் ஜெயிர் பொல்சனாரோவை போலீசார் கைது செய்தனர்.

பிரேசிலில் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜெயிர் பொல்சனாரோ (வயது 70). லிபரல் கட்சியைச் சேர்ந்த இவர் 2022-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார்.

இதில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தேர்தலில் தான் தோல்வியடைந்ததை பொல்சனாரோ ஒப்புக்கொள்ளவில்லை.

எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மீது சந்தேகம் இருப்பதாக கூறி ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது அரசு கட்டிடங்களை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

ஆனால் ராணுவத்தின் முயற்சியால் இந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு தலைமை தாங்கியதாக ஜெயிர் பொல்சனாரோவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கு விசாரணை பிரேசில் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் பொல்சனாரோவுக்கு 27¼ ஆண்டுகள் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஆட்சி கவிழ்ப்பு சதியில் தண்டனை பெறும் முதல் பிரேசில் அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே அடுத்த வாரம் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் முன்னதாகவே கைது செய்த போலீசார் பிரேசிலியாவில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு பொல்சனாரோவை அழைத்து சென்றனர். இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory