» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் ரூ.157.33 கோடி நலத்திட்ட உதவிகள் : உதயநிதி ஸ்டாலின் வழங்கினர்

வெள்ளி 27, அக்டோபர் 2023 8:20:09 PM (IST)



நெல்லையில் 157 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினனார்.


திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, நிதி மற்றும் மனித மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, திருநெல்வேலி மாநகராட்சி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் தூய்மைப்பணி டிராக்டர், மூன்று சக்கர ஸ்கூட்டர்கள், மின்சார தையல் இயந்திரம், வீட்டுமனைப்பட்டாக்கள், விவசாய கடன் அட்டை, கல்வி கடன்கள், தொழில் கடன்கள் உள்ளிட்ட 9 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கட்டிடங்கள் மற்றும் பாலங்கள், திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் தங்கும் அறைகள் என புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது: இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கிற வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1200 டெபிட் கார்டுகள் மற்றும் 9 ஆயிரம் பயனாளிகளுக்கு 157 கோடியே 33 லட்சம் அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எனும் மகத்தான திட்டத்தை முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார்கள். 1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிருக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும், கிட்டத்தட்ட 2 லட்சத்து 48 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர். 

ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டது, இதுவே முதல்முறை. இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி தான் உங்களுக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கான தேதி என்றாலும், ஒரு நாள் முன்னதாக 14 ஆம் தேதியே கழக அரசால் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இன்றைக்கு 1200 டெபிட் கார்டுகளை வழங்குகிறோம் என்றால், இவை பணம் எடுப்பதற்கான கார்டுகள் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகிற துருப்புச்சீட்டு. இந்தத் திட்டத்தை பின்பற்றி, கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எந்த ஒரு அரசு திட்டத்தை செயல்படுத்தப்படுகிற போதும், மேல்முறையீடு செய்கிற வசதி இருக்காது. ஆனால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை பொறுத்தவரை, விண்ணப்பம் ஏற்கபடாதவர்கள், மீண்டும் மேல்முறையீடு செய்கிற வசதியைச் செய்துள்ளோம். இதுவரை 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். மேலும், உங்கள் மேல்முறையீட்டை பரிசீலிக்க துணை ஆட்சியர், சார் ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளோம். மகளிர் மட்டுமன்றி திருநங்கையர், மாற்றுத்திறனாளிகளும் இன்றைக்கு இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனர். மேல்முறையீடு செய்வதற்கான காலம் நேற்று முன் தினத்தோடு முடிவடைந்த நிலையில், அந்த மேல்முறையீட்டு மனுக்களின் மீதான பரிசீலனையை நேற்று சாத்தூர் கோட்டத்தில் ஆய்வு செய்தோம். நான் சட்டமன்றத்தில் பேசியது போல், தகுதியுள்ள ஒரு மகளிர் கூட இந்த திட்டத்தில் இருந்து விடுபட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறோம்.

அது மட்டுமன்றி, அரசின் நலத்திட்டங்கள் உடனுக்குடன் மக்களை சென்றடைய வேண்டும். குறிப்பாக, ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களின் வாழ்வு மேம்பட வேண்டும். இது தான் நம் திராவிட மாடல் அரசின் லட்சியம். அதன் வெளிப்பாடு தான், இன்றைக்கு, மகளிர், மாற்றுத்திறனாளிகள், ஆதி திராவிடர், பழங்குடியினர் என அனைத்து தரப்பு மக்களுக்கும் வீட்டு மனைப்பட்டா, அரசு மருத்துவமனைக்கான உறவினர்கள் தங்கும் அறைகள், வங்கிக் கடன், சுழல் நிதி, விவசாய கடன் அட்டை, வணிக கடன், தொழில் மானியக் கடன், கல்விக்கடன் என 9 ஆயிரம் பேருக்கு 157 கோடியே 33 லட்சம் அளவில் நலத்திட்டங்களை வழங்குகிறோம்.

மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள், கல்வி, இலக்கியம், விளையாட்டு ஆகிய அனைத்து துறைகளிலும் முன்னேறிட வழிகாட்டும் வகையில், அன்பாடும் முன்றில் எனும் குறும்படத்தையும் வெளியிட்டுள்ளோம். இதனை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் வாழ்வில் சிறக்க என் வாழ்த்துகள்.

பெண்ணுரிமை குறித்து தந்தை பெரியார் கண்ட கனவுகளுக்கு எல்லாம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்வடிவம் கொடுத்து வருகிறது. நமது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் அதை செய்தார்கள், கலைஞர் அவர்களைத் தொடர்ந்து முதலமைச்சர் அவர்களும், மகளிர் முன்னேற்றத்துக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் முன்னேற்றம் மூன்று வழிகளில் தடுக்கப்பட்டிருக்கிறது என்று பெரியார் சொன்னார். ஒன்று, கலாச்சார ரீதியாக தடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு, சட்ட ரீதியாக தடுக்கப்பட்டிருக்கிறது. மூன்று, பொருளாதார ரீதியாக தடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்று தடைகளையும் நீக்கினால் போதும் பெண்கள் சுதந்திரமாக வாழக் கூடிய நிலை ஏற்பட்டு விடும் என்று பெரியார சொன்னார்கள்.

பெண்கள் முன்னேற்றத்துக்கு கலாச்சார ரீதியாக இருந்த தடைகள் என்னென்ன? தந்தை பெரியார் அவர்களே சொன்னார், பணக்காரன், ஏழை அடிமைத்தனத்தை விட, மேல்ஜாதி, கீழ்ஜாதி அடிமைத்தனத்தை விட, முதலாளி, தொழிலாளி அடிமைத்தனத்தை விட மோசமனது இந்த ஆண், பெண் அடிமைத்தனம் என்று சொன்னார்.

பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. பெண்களுக்கு படிப்புத் தேவையில்லை. குடும்பத்தைப் பார்த்துக் கொள்வது மட்டும் தான் பெண்களுக்கு வேலை. இப்படி தான் நம்முடைய சமுதாயம் ஒரு காலத்தில் இருந்தது. இது எல்லாத்தையும் எதிர்த்து பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தது நம்முடைய திராவிட இயக்கம். கழக அரசின் திட்டங்கள் எல்லாம் கலாச்சார ரீதியாக முடக்கப்படும் பெண்களை முன்னேற்றுவதற்கான நமது திராவிட மாடல் திட்டங்கள். இரண்டாவதாக, சட்ட ரீதியாகப் பெண்களுக்கு இருந்த முட்டுக்கட்டை என்ன? ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும், ஆண் பிள்ளைக்கு மட்டும் தான் அப்பா சொத்திலே உரிமை இருக்கிறது. பெண் பிள்ளைக்கு சொத்திலே உரிமை கிடையாது என்கிற நிலை தான் சட்ட ரீதியாக இருந்தது. ஆனால், நமது முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தான், தந்தை சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்று 30 வருடங்களுக்கு முன்பே இதற்கான சட்டத்தை நிறைவேற்றினார்கள். இன்றைக்கு எல்லா பெண்களுக்கும் சொத்திலே உரிமைக் கிடைத்திருக்கிறது. இதற்கு காரணம் நமது திமுக அரசு கொண்டு வந்த சட்டம் தான்.

அடுத்ததாக, பொருளாதார ரீதியில் பெண்களுக்கு இருக்கக் கூடிய முட்டுக்கட்டைகள் என்ன? ஒரு பெண் சிறுமியாக இருக்கும்போது, பணத்திற்காக தனது அப்பாவை எதிர்பார்க்க வேண்டும். அந்தப் பெண் வளர்ந்து திருமணம் ஆனதும் பணத்திற்காக கணவனை எதிர்பார்க்க வேண்டும். அந்த பெண் வயது முதிர்ந்த காலத்தில் பணத்திற்காக தனது மகனை எதிர்பார்த்திருக்க வேண்டும். இப்படி தான் இருக்கிறது பெண்களின் நிலை. இந்த நிலைமை மாறி, பெண்கள் ஆண்களுக்கு சமமாக வளர வேண்டுமானால் அவர்களும் ஆண்களைப் போல தாங்கள் விரும்பும் கல்வியைக் கற்க வேண்டும், தங்கள் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற வேலையிலே அமர வேண்டும்.

எனவே தான், நம்முடைய திராவிட மாடல் அரசு பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. பள்ளியில் இருந்து கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் வழங்குகிறது. படிப்பதற்காக அல்லது வேலைக்காக பெண்கள் பயணம் செய்வதற்கு வாய்ப்பாக மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பேருந்துப் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 31 ஆயிரம் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை சிற்றுண்டித் திட்டம் மிக முக்கியமானது. 17 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். பெண்களுடைய சிரமத்தை குறைக்கக் கூடியத் திட்டம் அது. காலையிலே எழுந்து வேலைக்கு செல்லக் கூடிய பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு டிபன் சமைச்சு வச்சுட்டு போறது எவ்வளவு சிரமம். அந்த சிரமத்தை இந்த திட்டம் போக்கியிருக்கிறது. 

இதுவரை நமது கழக அரசு நிறைவேற்றிய மகளிர் முன்னேற்றத் திட்டங்களிலேயே முதன்மையானது என்று சொல்லக் கூடிய திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம். இந்த திட்டத்திற்கு நம்முடைய முதலமைச்சர் வைத்திருக்கும் பெயர் தான் இதிலே முக்கியமானது. இந்த திட்டம் மகளிருக்கான உரிமை என்பதால், இதற்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்று பெயர் வைத்துள்ளார்கள்.பெண்களுடைய உழைப்புக்கு ஓர் அண்ணனாக இருந்து நம்முடைய முதலமைச்சர் இப்போது அங்கீகாரம் கொடுத்திருக்கிறார். உங்களுடைய மகனாக, சகோதரனா இருந்து இதைப் பார்த்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

பெண்கள் கல்வியிலே, பொருளாதாரத்திலே உயர வேண்டும். அதேபோல் பொது வாழ்க்கையிலும் பெண்கள் அதிகமாக ஈடுபட வேண்டும். அப்போது தான் உங்களுக்கான உரிமைகளை நீங்கள் வலியுறுத்தி பெற முடியும். பெண்கள் மொபைல் பயன்படுத்துகிறீர்கள். உங்களுக்கு நிறைய செய்திகள் வரும். அப்படி வருகிற செய்திகள் உண்மையா பொய்யா என்று நீங்கள் ஆராய்ந்து அதனை மற்றவர்களுக்கு ஷேர் செய்ய வேண்டும். இப்போது, உள்ளாட்சிப் பதவிகளில் 50 சதவீதம் பெண்கள் வந்திருக்கிறார்கள். அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள மேயர், நகராட்சி மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ஒன்றியக்குழு தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவிகளில் 50 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். இந்த சாதனையை நடத்திக் காட்டியது நம் திராவிட மாடல் அரசு. பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவுப் பெற்றவர்களாக இருப்பது தான் பெண்ணுரிமைக்கான அடித்தளம்.

இந்த நேரத்தில் மகளிருக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். தந்தை பெரியார் சொன்னது தான். மகளிர் நீங்கள் அனைவரும் முற்போக்காகவும் பகுத்தறிவுடனும் சிந்திக்க வேண்டும். சுதந்திரமாக சிந்திக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் முற்போக்காக, சுதந்திரமாக சிந்திக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். எனவே, மகளிர் நிறைய படிக்க வேண்டும், முற்போக்காக சிந்திக்க வேண்டும். அப்போது தான் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் முன்னேற முடியும். ஆண்களை விட பெண்கள் தான் தங்களுடைய வருமானத்தில் பெரும்பகுதியை தங்கள் குடும்பப் பராமரிப்புக்காக செலவிடுகிறார்கள்.

எனவே, பொருளாதாரத்தில் பெண்கள் வளர்வது நமது வீட்டிற்கும், சமுதாயத்திற்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் மிகப்பெரிய பலனைத் தரும்.கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஒவ்வொரு வீட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிய தூண்டுகோலாக அமையப் போகிறது.கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயனாளிகள் மற்றும் பிற துறைகளின் பயனாளிகளாக இங்கு வந்திருக்கக் கூடிய உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்தையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.கழக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்ல நீங்கள் ஒவ்வொருவரும் டீசயனெ யுஅடியளளயனழச ஆக - தூதுவர்களாக மாறிட வேண்டும் என்று கூறி விடை பெறுகிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலர் தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory