» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீரராகவ பெருமாள் கோவிலில் நந்தவனம் அமைக்கும் பணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

சனி 9, டிசம்பர் 2023 5:11:52 PM (IST)



ஏர்வாடியில் நந்தவனம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மரக்கன்றுகள் நட்டுவைத்து தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் அமைந்துள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் அரிய வகை மரக்கன்றுகளை நட்டு நந்தவனம் அமைக்கும் பணிகள் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் மரக்கன்றுகள் நட்டுவைத்து இன்று தொடங்கப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையுடனும், மணிமுத்தாறில் இயங்கி வரும் அகத்திய மலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையமும் இணைந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில் நந்தவனங்களில் காணப்படும் மரங்கள் கணக்கெடுப்பை நடத்தினார்கள். இக்கணக்கெடுப்பின் போது நமது பாரம்பரிய இயல் மரங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது தெரிய வந்தது.

பொதுவாக கோவில் நந்தவனங்கள் இயல் மரங்களின் புகலிடமாக இருக்கும். மேலும் இந்த நந்தவனங்கள் பல்லுயிர்களின் வாழ்விடமாகவும், உள்@ர் மக்களின் தேவைகளுக்காக மூலிகைச் செடிகளையும் கொண்டிருக்கும். இது போன்ற பாரம்பரிய நந்தவனங்களை உருவாக்கும் முயற்சியில் இந்து சமய அறநிலையத் துறையோடு அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையம் இணைந்து நம்ம ஊரு நந்தவனம் திட்டத்தை 2021ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்கள். இத்திட்டம் பாப்பாக்குடி திருக்கடுகை மூன்றீஸ்வரர் கோவில், பள்ளக்கால் பெருமாள் கோவில், கோடகநல்லூர் அபிமுக்தீஸ்வரர் கோவில், ஏர்வாடி சிவன் கோவில் மற்றும் வீரவநல்லூர் பூமிநாதர் ஆகிய ஐந்து கோவில்களில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று ஆறாவது நந்தவனம் ஏர்வாடி வீரராகவப்பெருமாள் கோவிலில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நந்தவனத்தில் ஆனைக் குன்றுமணி, உலக்கைப்பாலை, புரசு, காட்டுப்புரசு, மந்தாரை, சிவகுண்டலம், சரக்கொன்றை, காட்டுநெல்லி போன்ற 40 வகையான மரக்கன்றுகள் இன்று நடப்பபட்டது. இதுவரைக்கும் நம்ம ஊரு நந்தவனத் திட்டத்தின் மூலம் 112 இனங்களைச் சார்ந்த 650 மரங்கள் நடப்பட்டுள்ளது. நமது இயல் மரங்களை வளர்த்தெடுக்கும் ஒரு முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற கோவில்களிலும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இந்நந்தவனத்தில் மாவட்ட ஆட்சியர் ஆனைக்குன்று மணி மரத்தை நட்டு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நாங்குநேரி வட்டாட்சியர் விஜய ஆனந்த் , ஏர்வாடி பேரூராட்சி தலைவர் தஸ்லிமா அயூப்கான் , ஏர்வாடி பேரூராட்சி செயல் அலுவலர் சார்ஜன் மேத்யூ , வீரராகவ பெருமாள் கோவில் செயல் அலுவலர் முருகன் ,பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் செல்வன்; , ஸ்ரீநிவாசன் சேவைகள் அறக்கட்டளை இயக்குநர் லெட்சுமி நாராயணன் , பேரிடர் மேலாண்மை தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் சபேசன் ,அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.மதிவாணன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory