» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மதுரை கோட்டத்தில் அறிவிக்கப்பட்ட ரயில்கள் விபரம்

ஞாயிறு 10, டிசம்பர் 2023 6:28:29 PM (IST)

புதிய ரயில்களால் திருநெல்வேலிக்கு அடிக்கிறது யோகம்

தென்மாவட்டங்களிலிருந்து இந்தியாவில் கிழக்கு பகுதிகளான ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளுக்கு அதாவது  விஜயவாடா,விசாகப்பட்டினம், புவனேஸ்வர், கட்டாக், காரக்பூர் வழியாக செல்ல கன்னியாகுமரி - ஹவுரா என்ற வாராந்திர ரயில் சேவை மட்டுமே உள்ளது.

 இந்த ரயிலை தினசரி ரயிலாக மாற்றம் செய்து இயக்க வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவ்வாறு இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்கும் போது தென்மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு ஓர் தினசரி ரயில் சேவை கிடைக்கும். இந்த நிலையில் தற்போது விழுப்புரத்திலிருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள புருலியாவுக்கு வாரம் இருமுறை இயங்கி வந்த ரயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்யப்படும் என்று ரயில்வே வாரியம் ஆணை பிறப்பித்துள்ளது. 

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரயில்  மதுரை கோட்டத்தின் எல்லையான திருநெல்வேயியுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இனி இந்த ரயில் நீட்டிப்புக்கு பிறகு இந்தியாவில் கிழக்குப் பகுதிகளுக்கு செல்ல வாரத்திற்கு மூன்று நாள் ரயில் சேவை கிடைக்கும். இது மட்டுமல்லாமல் இந்த ரயில் திருவண்ணாமலை, காட்பாடி, சென்னை பெரம்பூர் வழியாக இயக்கப்பட இருக்கிறது. இது தென்மாவட்ட மக்களுக்கு சென்னைக்கும், திருவண்ணாமலைக்கும் நேரடி ரயில் சேவை கிடைக்கிறது. தற்போது மதுரைக்கு தெற்கே உள்ள பகுதிகளிலிருந்து , திருவண்ணாமலைக்கு செல்ல எந்த ஒரு ரயில் சேவையும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.

குமரி புறக்கணிப்பு தூங்கும் எம்.பி

இந்த ரயில் நீட்டிப்பு செய்யும் போது திருநெல்வேலிக்கு பதிலாக நாகர்கோவில் அல்லது கன்னியாகுமரி அல்லது திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு அறிவித்திருக்கலாம். இவ்வாறு அறிவித்திருந்தால் குமரி மாவட்ட பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் நெல்லை எனது எல்லை குமரி எனது தொல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டுள்ளது. 

இது மட்டுமல்லாமல் திருநெல்வேலியை மையமாக வைத்து இன்னும் பல புதிய ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. நமது எம்.பி ரயில்வே ரயில்வே வாரிய அதிகாரிகளிடம் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டில்தான் உள்ளது. எனவே இது போன்ற தமிழ்நாடு வழியாக இயங்கும் ரயில்கள் கன்னியாகுமரியிலிருந்து இயக்க வேண்டும் என்று முறையீட்டு தகுந்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இவ்வாறு நடவடிக்கை எடுத்திருந்தால் இது போன்ற ரயில்கள் திருநெல்வேலியுடன் நிற்பதற்கு பதிலாக குமரிக்கு வந்திருக்கும் நமது மாவட்ட பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் கன்னியாகுமரி எம்.பி நீண்ட தூக்கத்தில் உள்ளார் என்று தெரிகிறது. 

கடந்த செப்டம்பர் மாதம் திருநெல்வேலியிருந்து சென்னைக்கு வந்தேபாரத் ரயில் புதிதாக அறிவிக்கப்பட்ட இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என்று குமரி எம்.பி தெற்கு ரயில்வே பொது மேலாளரை சம்பிரதாயத்துக்காக வேண்டி  நேரடியாக சென்று பார்த்து கோரிக்கை வைத்தார். இவ்வாறு கோரிக்கை வைப்பது எல்லாம் எந்த பயனும் இல்லை. 

தொகுதி பிரச்சனைக்காக குறிப்பாக ரயில்வே துறை வளர்ச்சியில் புதிய ரயில்கள் இயக்க வேண்டும் என்றால் அவர் கடுமையாக அழுத்தம் மற்றும் முயற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே கிடைக்கும். இல்லாமல் ரயில்வே அமைச்சரை பார்த்து மனு கொடுப்பது தெற்கு ரயில்வே பொது மேலாளரை பார்த்து மனு கொடுப்பது பாராளுமன்றத்தில் விவாதங்களில் பேசுவது எல்லாம் வேலைக்கு உதவாது. இதை அவர் உணர வேண்டும். இனி காலம் கடந்து விட்டது. ரயில்வே வாரியத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து தனது தொகுதிக்கு இது தேவை என்று கூறி அதை நிறைவேற்றாமல் நான் இங்கிருந்து நகர மாட்டேன் என்று அந்த அலுவலகத்தின் முன்னால் போராட்டம் செய்தால் மட்டுமே ரயில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

திருவனந்தபுரம் கோட்டம் காரணம்?

திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்துக்கு தங்கள் மாநிலம் வழியாக இயங்கும் ரயில்கள் வராமல் பக்கத்து மாவட்டத்தில் நிறுத்தி உள்ளது நினைக்கும் போது நமது பகுதி திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள காரணத்தால் இது போன்ற ரயில்கள் வராமல் உள்ளது என்று அனைவருக்கும் தெள்ள தெளிவாக தெரிகிறது. இதனால் குமரி மாவட்ட பகுதிகள் மதுரை கோட்டத்தின் கீழ் வந்தால் இதுபோன்ற ரயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் இயல்பாய் தோன்றுகிறது. இது மட்டுமல்லாமல் ஏன் இது போன்ற ரயில்களை திருவனந்தபுரம் கோட்டத்தில் நாகர்கோவிலிருந்து இயக்க முடியவில்லை என்று கேள்வி அனைவரது மனதிலும் எழுகின்றது.


இடநெருக்கடி பிரச்சனை:

இந்த ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய முடியாமல் போனது முக்கிய காரணமாக நாகர்கோவில் ரயில் நிலையம் இடநெருக்கடி பிரச்சனையால் சிக்கி இருப்பதே ஆகும். ஏன் நாகர்கோவிலில் இட நெருக்கடி ஏற்படுகிறது என்று பார்த்தால் நாகர்கோவிலிருந்து அதிக அளவில் ரயில்கள் கேரளா வழியாக அதாவது திருவனந்தபுரம் மார்க்கம் இயங்குகின்ற காரணத்தால் இடநெருக்கடியால் பிரச்சனை ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்கு மாற்று வழிகளை பற்றி ஆராய்ந்து நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும் குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

திப்ருகர் ரயில் காரணம்?

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மாலையில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு செல்லும்  பயணிகள் நடைமேடையில்  காத்து நிற்கும் போது ஒரு ரயில் மனித கழிவு நறுமணத்துடன்  முழுவதும் காலியாக வந்து செல்வதை குமரி மாவட்ட பயணிகள் அனைவரும்  பார்த்திருப்பார்கள். ஒரு சில பயணிகள் இந்த ரயில் தான் சென்னைக்கு செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் என்று ஏறி ஏமாந்தவர்கள் உண்டு. இந்த ரயில்தான் இங்கு பராமரிப்புக்கு என்று வந்து  மதுரை, சென்னை வழியாக செல்லாமல் கேரளா வழியாக சுற்றுப்பாதையில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திப்ருகர் செல்லும் ரயில் ஆகும்.

திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்யப்பட்ட இந்த புருலியா ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்யப்படாமல் திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டதற்கு முக்கிய காரணமாக மாவட்டத்தில்  இயங்கும்  திப்ருகர் ரயில்  ஆகும். கன்னியாகுமரியிலிருந்து வாரத்துக்கு நான்கு நாட்கள் இயங்கும் இந்த திப்ருகர் ரயில் வராமலிருந்தால் நான்கு சேவைகள் தமிழ்நாடு வழியாக இயக்க தேவையான பராமரிப்பு இடம் கிடைத்திருக்கும். எளிதாக இந்த புருலியா ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்கியிருக்க முடியும்.  இந்த திப்ருகர் ரயிலால் நமக்கு வரவேண்டிய பல ரயில்களை இழந்துள்ளோம் என்றால் மிகையாகாது.

தற்போது  இந்தியாவில் கிழக்கு பகுதிகளுக்கு நாகர்கோவில் - ஷாலிமார் வாராந்திர ரயில், கன்னியாகுமரி - திப்ருகார் வாரம் நான்கு நாள் ரயில் என வாரத்திற்கு ஐந்து சேவைகள் உள்ளன. இந்த ரயில்களால் கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. இந்த காரணத்தால் ரயில்வே அதிகாரிகள்  இந்தியாவில் கிழக்கு பகுதிகளிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு போதிய ரயில் சேவை உள்ளது என்ற காரணத்தால் இந்த  புருலியா ரயில் திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறலாம். 

நாகர்கோவில் டவுன் வழியாக இயக்குதல்

நாகர்கோவில் ரயில் நிலைய இடநெருக்கடியை குறைப்பதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு முழு அளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சென்னை - கொல்லம் அனந்தபுரி ரயில் கடந்த வருடம் முதல் நாகர்கோவில் டவுண் வழியாக இயக்கப்பட்டது.  

இது போன்று குருவாயூர் - சென்னை, மதுரை - புனலூர் ஆகிய ரயில்களையும் நாகர்கோவில் டவுன் வழியாக இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கப்பட்டால் காலை மற்றும் மாலை நேரத்தில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் நடைமேடை இடநெருக்கடி பிரச்சனை ஓரளவுக்கு குறையும். இதைப்போல் திருவனந்தபுரம் -நாகர்கோவில் பயணிகள் ரயிலை நாகர்கோவில் டவுண் வழியாக திருநெல்வேலி வரையிலும் திருநெல்வேலி - நாகர்கோவில் பயணிகள் ரயிலை நாகர்கோவில் டவுன் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ரயில்வே துறையிடம் வைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு இயக்கும் பட்சத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் நிலவும் நாகர்கோவில் நடைமேடை இடநெருக்கடி பிரச்சனை ஓரளவுக்கு குறையும். இந்த இரண்டு ரயில்களையும் நீட்டிப்பு செய்து இயக்கும் போது தற்போது நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரத்துக்கு அதிக அளவில் பயணிகள் ரயில் சேவை உள்ளது போன்று பகல் நேரத்தில் திருநெல்வேலிக்கும் நேரடி  ரயில் சேவை வசதி கிடைக்கும்.

மதுரை கோட்டத்தில் அறிவிக்கப்பட்ட ரயில்கள் விபரம்

1. திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தேபாரத் ரயில்

2. திருநெல்வேலி -பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில்

3. செங்கோட்டை - தாம்பரம் வழி திருநெல்வேலி வாரம் மூன்று முறை ரயில்

4. செங்கோட்டை - மதுரை மற்றும் திண்டுக்கல் - மயிலாடுதுறை ரயிலை இணைத்து செங்கோட்டை - மயிலாடுதுறை என ஒரே ரயிலாக இயக்கம்.

5. எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வழி செங்கோட்டை வாரம் இரண்டு முறை ரயில்

6. மதுரை - செங்கோட்டை மற்றும் புனலூர் -குருவாயூர் ஆகிய இரண்டு ரயில்களையும் இணைத்து மதுரை - குருவாயூர் என ஒரே ரயிலாக இயக்கம்,

7. மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு

8. ராமேஸ்வரம் - மங்களூர்  வழி மதுரை வாரம் இருமுறை ரயில்

9. கொல்லம் - சென்னை எழும்பூர் தினசரி வழி செங்கோட்டை

10. திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்

11. திருநெல்வேலி - சென்னை ஏசி சிறப்பு ரயில்

12. திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வந்தேபாரத் ரயில் சிறப்பு ரயில்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory