» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்திற்கு அயலகத்தில் வாழும் தமிழர்கள் வருகை!

வியாழன் 4, ஜனவரி 2024 5:48:08 PM (IST)



திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மணி மண்டபத்தினை இன்று உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளை புதுப்பிக்கும் "வேர்களைத் தேடி" திட்டத்தின் கீழ் அயலகத்தில் வாழும் தமிழர்கள் பார்வையிட்டார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்த அயலகத்தில் வாழும் தமிழர்களை மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவராமன் வரவேற்றார்கள். அயலகத்தில் வாழும் தமிழர்களின் நலன் காக்கவும், அயலகத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து கல்வி, வேலைவாய்ப்புகள் என்று இடம்பெயரும் தமிழர்களை பாதுகாப்பாக வழிநடத்தவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை' செயல்பட்டு வருகிறது.

அயலகத் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்கும் முகமாக தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் தினம்" எனும் சிறப்பு தினத்தை அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறது.

அயலகத் தமிழர்களின் கலச்சார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு பகுதியாக, பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயர்த்து அங்கு வாழும் அயலகத்தமிழர்களின் குழந்தைகளுக்காக வேர்களைத்தேடி என்றொரு பண்பாட்டுப்பயணத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்கள். இத்திட்டம் மூலம் அயலகத்தில் வாழும் தமிழ் இளைஞர்களை தமிழ்நாடு அரசு செலவில் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து, தமிழ் மற்றும் தமிழர்தம் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு பண்பாட்டு பயணம் மேற்கொள்ள உத்திரவிட்டிருந்தார்.

இதனடிப்படையில் வேர்களைத் தேடி திட்டத்தின் முதல் பயணம் டிசம்பர் 27 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் இருந்து தொடங்கியது. தமிழ்நாடு அயலகத் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் இப்பண்பாட்டு பயணத்தை துவக்கி வைத்தார். இப்பண்பாட்டு பயணத்திற்காக ஆஸ்திரேலியா, கனடா, பீஜி இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 57 இளைஞர்கள் தேர்வாகி தமிழ்நாடு அரசு செலவில் வந்துள்ளனர்.

இவர்கள் சென்னையில் இருந்து மகாபலிபுரம் தஞ்சாவூர், சிவகங்கை தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பயணித்து, தற்போது திருநெல்வேலி மாவட்டம், டவுணில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயிலுள்ள சிற்பங்கள், இசைத் தூண்கள், சிலைகள் உள்ளிட்டவைகளை சுற்றி பார்த்து, இங்குள்ள ஆயிரங்கால் மண்டபம், இசைத்தூண்கள் ஆகியவற்றை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். தாமிரசபை மரச்சிற்பங்களை நுட்பமான வடிவமைப்பினைக் கண்டு வியந்தனர்.

அதனைத்தொடர்ந்து, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்திலுள்ள நூல்கள் மற்றும் வாழ்க்கை வரலாறு குறித்து அமைக்கப்பட்டுள்ள ஒலி, ஒளி காட்சியினை பார்வையிட்டார்கள். மேலும், அருள்மிகு நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்பாள் திருக்கோயில் வரலாறு மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து எழுத்தாளர் நாறும்பூநாதன் விளக்கி எடுத்துரைத்ததை அயலகத்தில் வாழும் தமிழர்கள் ஆர்வத்துடன் கேட்டறிந்தார்கள்.

தொடர்ந்து, இவர்கள் மதுரை, திருச்சி, செஞ்சிகோட்டை காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு பயணித்து, தமிழர்களின் கட்டிடகலை, சிற்பக்கலை, இயல், இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், சுதந்திரபோராட்ட வரலாறு, பல்வேறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்வார்கள்.

இந்த இருவார பயணத்தின் மூலம் தமிழர்களின் கலாச்சாரம், வரலாறு, மொழியியல் உட்பட பல்வேறு திறன்களை பெறுவார்கள். மூன்றாவது ஆண்டாக அயலகத்தமிழர்கள் தினம் வரும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இவ்விழாவில் இந்த இளைஞர்கள் பங்கேற்று தங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்கள். 

மேலும் இவர்கள் தங்கள் நாடுகளுக்கு சென்று தமிழர்களின் கலாச்சார தூதுவர்களாகவும் செயல்படுவார்கள். இந்த பயணத்தின்போது, துணை ஆட்சியர் (மறுவாழ்வுத்துறை) செண்பகவல்லி, சுற்றுலா அலுவலர் சிவராமன், அகதிகள் வட்டாட்சியர் தே.திருப்பதி, எழுத்தாளர் நாறும்பூநாதன், ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், கோவில் அலுவலர் மணிகண்டன் மற்றும் அயலக தமிழர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory