» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பொங்கல் விடுமுறை முடிந்தது: ரயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய பயணிகள்

வியாழன் 18, ஜனவரி 2024 8:31:11 AM (IST)

பொங்கல் விடுமுறை முடிந்து வெளியூர்களுக்கு திரும்பியதால், நெல்லை பஸ், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கல், காணும் பொங்கலையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட வெளியூர்களில் வசித்த ஏராளமானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடினர். பெரும்பாலானவர்கள் கடந்த 12-ந்தேதியில் இருந்தே சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் படையெடுத்தனர்.

வெளியூர்களில் கல்வி, வேலை நிமித்தமாக வசித்த பெரும்பாலானவர்கள், தென்மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். 5 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின்னர் நேற்று அனைவரும் மீண்டும் வெளியூர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

இதனால் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் மாலையில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆம்னி பஸ்நிறுத்தத்திலும் ஏராளமானவர்கள் காத்திருந்து பஸ்களில் ஏறிச் சென்றனர். வெளியூர்களுக்கு புறப்பட்ட பஸ்களில் பயணிகள் ஓடிச் சென்று இடம் பிடித்து பயணித்தனர். இதையொட்டி நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர், திண்டுக்கல், சேலம், பெங்களூரு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.

பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் குவிந்ததால், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எந்தெந்த நடைமேடைகளில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன? என்பதையும், பயணிகள் தங்களது நகைகள், உடைமைகளை பத்திரமாக பார்த்து கொள்ளுமாறும் ஒலிப்பெருக்கியில் அறிவுறுத்தினர். இதேபோன்று நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலும் மாலையில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. 

நெல்லையில் இருந்து சென்னை சென்ற ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முன்பதிவு செய்யாதவர்கள் பொதுப்பெட்டியில் நின்றவாறே பயணித்தனர். நெல்லை சந்திப்பு ரயில் நிலைய தகவல் மையத்தில் வடமாநில ஊழியர்கள் பணியில் இருந்தனர். அவர்களிடம் தமிழில் பேசிய பயணிகள், ரயில் வந்து செல்லும் நேரம் குறித்து கேட்டனர். ரயில் ஊழியர்களுக்கு தமிழ் தெரியாததால் பயணிகள் குழப்பமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory