» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இரட்டை ரயில் பாதை பணிகள் தொடங்கியது: பிப்.29- வரை போக்குவரத்து மாற்றம்

புதன் 21, பிப்ரவரி 2024 8:22:43 AM (IST)



நெல்லை-மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியதையடுத்து வருகிற 29-ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போது இறுதி கட்டமாக மதுரை -தூத்துக்குடி இடையேயும், வாஞ்சிமணியாச்சியில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவில் வரையிலும் மேற்கொள்ளப்பட்டது. இதில் மதுரை -நெல்லை இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

நெல்லை -நாகர்கோவில் இடையே உள்ள வழித்தடத்தில் மேலப்பாளையத்தில் இருந்து நாங்குநேரி, வள்ளியூர், பணகுடி, காவல்கிணறு, ஆரல்வாய்மொழி வரை 56 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு முதல் இருமார்க்கத்திலும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மீதமுள்ள ஆரல்வாய்மொழி -நாகர்கோவில் இடையே 13 கிலோ மீட்டர், மேலப்பாளையம் -நெல்லை சந்திப்பு இடையே 3 கிலோ மீட்டர் தூரம் வரை பாதை அமைக்கும் பணி மட்டும் முடிக்காமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று மேலப்பாளையத்தில் இருந்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதன் காரணமாக சில ரயில்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. நேற்று செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேரன்மாதேவி வரை மட்டுமே இயக்கப்பட்டது. மறுமார்க்கத்தில் இருந்து நெல்லை- செங்கோட்டை ரயில் நெல்லையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக சேரன்மாதேவியில் இருந்து புறப்பட்டது.

இன்றும் செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு வரும் பயணிகள் ரயில் (06684, 06658) சேரன்மாதேவி வரை மட்டுமே இயக்கப்படும். நெல்லையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில்கள் (06687, 06657) நெல்லைக்கு பதிலாக சேரன்மாதேவியில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும். இந்த ரயில் பாதை அமைக்கும் பணிகள் வருகிற 29-ம் தேதி வரை நடைபெறுவதால் அன்று வரை இந்த போக்குவரத்து மாற்றம் இருக்கும் என்று தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory