» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போலீசார் தாக்கியதில் வேன் டிரைவர் சாவு: மனைவிக்கு அங்கன்வாடி பணி வழங்க உத்தரவு

புதன் 27, மார்ச் 2024 8:16:02 AM (IST)

சங்கரன்கோவிலில் போலீசார் தாக்கியதில் இறந்த வேன் டிரைவரின் மனைவிக்கு அங்கன்வாடி பணியாளர் வேலை வழங்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு புதூரைச் சேர்ந்த மீனா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- எனது கணவர் முருகன் (36), வேன் டிரைவர். சிவராத்திரி விழாவுக்காக கடந்த 8-ந்தேதி அச்சம்பட்டியை சேர்ந்த பெண்களை வேனில் ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு சென்றார். அப்போது அந்த வேன், ஆட்டோ மீது மோதியது. இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த போலீசார், எனது கணவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். இதில் மயங்கிய என் கணவரை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். என் கணவர் இறந்ததால், 3 குழந்தைகளுடன் எனது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, முருகனின் உடலை பெறாமல் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முருகனின் உடலை பெற்று இறுதிச்சடங்குகளை முடித்தால், இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஐகோர்ட்டு நேற்றுமுன்தினம் அறிவுறுத்தியது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, முருகனின் உடலை அரசு மருத்துவமனையில் இருந்து பெற்றுக்கொண்டோம் என தெரிவிக்கப்பட்டது.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரருக்கு அங்கன்வாடி பணியாளர் பணி வழங்க வேண்டும். முருகனின் குடும்பத்தினருக்கு ஆதிதிராவிடர் நல நிதியில் இருந்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். முருகன் இறந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. கண்காணிப்பில் முறையாக விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory