» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக்கொலை: நெல்லையில் பயங்கரம்

ஞாயிறு 21, ஏப்ரல் 2024 12:14:03 PM (IST)

நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

நெல்லை சந்திப்பு பாபுஜி நகர் காட்டுப் பகுதியில் நேற்று மாலையில் ஒருவர் வெட்டு காயத்துடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள், நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் கீதா, சந்திப்பு உதவி கமிஷனர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து தடயவியல் அதிகாரி கலா லட்சுமி சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தார். 

பின்னர் போலீசார், பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக பிணமாக கிடந்தவரின் கையில் வைத்திருந்த கார் சாவி ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக கார் ஏதும் நிறுத்தப்பட்டு உள்ளதா? என்று சோதனை நடத்தினர். அப்போது சுமார் 100 மீட்டர் தூரத்தில் ஒரு கார் அனாதையாக நிறுத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இறந்தவரிடம் இருந்து கைப்பற்றிய சாவியைக் கொண்டு அந்த காரை திறந்தனர். இதனால் இறந்து கிடந்தவர் அந்த காரில் வந்தது உறுதி செய்யப்பட்டதால் போலீசார் அந்த காரை சல்லடை போட்டு சோதனை நடத்தினர். அந்த காரில் நில பத்திரங்கள், ஆதார் அட்டையின் நகல்கள், புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து போலீசார் அந்த காரை பறிமுதல் செய்து சந்திப்பு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆதார் அட்டை, புகைப்படங்களை வைத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிணமாக கிடந்தவர் விருதுநகர் மாவட்டம் பாலையம்பட்டி இ.பி. காலனியை சேர்ந்த மாரியப்பன் மகன் காளிராஜ் (45) என்பது தெரியவந்தது. மேலும் இவர் மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலங்களை வாங்கி விற்பனை செய்து வந்த ரியல் எஸ்டேட் அதிபர் என்பதும் தெரியவந்தது.

நேற்று காலையில் நிலம் வாங்கி விற்பனை செய்வதற்காக நெல்லையில் ஒருவர் அழைத்ததாக அவரை சந்திக்க வந்தார். பின்னர் பாபுஜிநகர் காட்டுப்பகுதிக்கு காளிராஜ் சென்றார். அப்போது, அங்கு மறைந்திருந்த 4 பேர் கொண்ட மர்மகும்பல் காளிராஜை காலில் அரிவாளால் வெட்டி கீழே தள்ளி விட்டு பின்னர் அவரின் கழுத்து, கை, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொழில் போட்டியில் இந்த கொலை நடந்ததா? அல்லது நிலம் விற்பனை செய்ததில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட காளிராஜ் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ேமலும் மர்ம கும்பலை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின் பேரில் உதவி போலீஸ் கமிஷனர்கள் செந்தில்குமார் (நெல்லை டவுன்), வெங்கடேசன் (நெல்லை சந்திப்பு) ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory