» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பழைய குற்றாலம் அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி : பரிசீலிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதன் 5, மார்ச் 2025 7:44:10 PM (IST)

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவியில் வழக்கம் போல் எவ்வித தடையும் இன்றி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அம்பை சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா மதுரை உயர்நீதி மன்ற கிளையில் தொடர்ந்த வழக்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் குற்றாலத்தில் குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி சிற்றருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகள் உள்ளது. இந்த அருவிகளில் விழும் தண்ணீர் வனந்பகுதிகளைத் கடந்து வருவதால் அதில் மூலிகை குணம் நிறைந்திருப்பதாகவும் அந்த தண்ணீரில் குளிப்பதால் தீராத பல்வேறு நோய்கள் குணமாகும் என்றும் குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட தொடர்ந்து அருவியில் விழும் மூலிகை தண்ணீரில் குளிப்பதால் குணமடைவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். 

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து நூறு ஆண்டுகளுக்கும் மேலாக 24 மணி நேரமும் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் குளித்து வந்தனர். இந்நிலையில் குற்றாலம் வனப்பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் 17 ம் தேதி அன்று குற்றாலம் வனப்பகுதியில் பெய்த பலத்த மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பழைய குற்றாலம் அருவியில் குளித்துக் கொண்டிருந்த நெல்லை அபினேஷ் (17) மாணவனை வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் மாணவன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். 

அதனைத் தொடர்ந்து குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க ஒரு வாரத்திற்கும் மேலாக தடை விதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மழையின் அளவு குறைந்ததால் அருவிகளில் விழும் தண்ணீரின் அளவு குறைந்தது இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி, உள்ளிட்ட அருவிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் 24 மணி நேரமும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் பழைய குற்றாலம் அருவியில் மட்டும் காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இது பற்றி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கடந்த நூறாண்டுகளுக்கு முன்பு பழைய குற்றாலம் அருவிக்கு செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லாத நேரத்திலும் கூட பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் கரடு முரடான பாதையில் நடந்து சென்று இரவும் பகலும் குளித்து வந்தனர்.

ஆனால் இப்போது நல்ல சாலை வசதி , மின்சார வசதி, அருவிப்பகுதியில் மின் விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருந்தும் பொதுமக்கள் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி இல்லை என்பது மிகவும் வேதனைக்குரியது. இதனால் நாளுக்கு நாள் பழைய குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் பழைய குற்றாலத்தில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் அதனை நம்பி வாழுகின்ற சிறு வியாபாரிகள் குத்தகைதாரர்கள் பழைய குற்றாலம் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். 

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா அந்தப் பகுதி பொது மக்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார் அந்த வழக்கில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் குளிப்பது போல் பழைய குற்றாலம் அருவியிலும் குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். 

இந்த பொதுநல வழக்கில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா சார்பில் வழக்கறிஞர் முரளி குமரன் ஆஜரானார் . இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை அமர்வு நீதிபதி ஜெ. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி ஆகியோர் பழைய குற்றாலம் அருவியில் வழக்கம் போல் எவ்வித தடையும் இன்றி சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை அறிந்த தென்காசி மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் அந்தப் பகுதி வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக பொதுநல வழக்கு தொடர்ந்த அம்பை சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையாவிற்கு நன்றி தெரிவித்தனர். மேலும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக பழைய குற்றாலம் அருவியில் 24 மணி நேரமும் குளிக்க உரிய அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory