» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்

புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

வள்ளியூரில் வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய குடியிருப்பு காலனி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (78). இவர் மின்வாரியத்தில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ருக்மணி (71). இவர்களுக்கு பாலசுந்தர், செந்தில் முருகன் ஆகிய 2 மகன்களும், சண்முகசுந்தரி என்ற மகளும் உள்ளனர். பாலசுந்தர் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பணியாற்றி வருகிறார். 

மேலும் தனது ெபற்றோர் வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். செந்தில்முருகன், சண்முகசுந்தரி ஆகியோர் வெளியூர்களில் வசித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் அர்ஜூனன் இறந்துவிட்டார். இதனால் ருக்மணி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு தினமும் பாலசுந்தர் சாப்பாடு கொடுப்பது வழக்கம்.

அதன்படி, நேற்று காலையில் சாப்பாடு கொடுப்பதற்காக பாலசுந்தர் சென்றார். ஆனால், முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்தது. தனது தாயார் பெயரை கூறி அழைத்தும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பாலசுந்தர் வீட்டின் பின்புறம் சென்றார். அங்கு பின்கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்றபோது அங்கு ருக்மணி தலையில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். 

அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலி மற்றும் கையில் அணிந்திருந்த 7 பவுன் வளையல் என 14 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக வள்ளியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டிஎஸ்பி வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

ருக்மணி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்மநபர்கள் பின்வாசல் கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டில் இருந்த ருக்மணியை அடித்துக்கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் லாக்கர் இருந்ததால், அதற்குள் வைக்கப்பட்டிருந்த நகைகள் தப்பின.தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. 

ருக்மணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். வள்ளியூரில் வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory