» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்

செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)



திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் இன்று (செவ்வாய்ழ்க்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. 

தென் தமிழ்நாட்டில் வற்றாது வளங்கொழிக்கும் தாமிரபரணி என வழங்கும் தண்பொருநை ஆற்றின் பாங்காய் அமைந்துள்ளது திருநெல்வேலி என்னும் புண்ணியதலம். இது, பாண்டி நாட்டில் பதினான்கு பாடல்பெற்ற சிவத்திருத் தலங்களில் ஒன்றாகும். வேதபட்டர், இறைவனுக்குத் திருவமுது ஆக்குவதற்கு காயப்போட்டிருந்த நெல் மழையினால் நனையாதபடி வேலியிட்டுக் காத்த சிறப்புடையதும். 

அகத்திய முனிவருக்கு திருமணக் கோலம் காட்டிய மேன்மையுடையதும், தாருகாவனத்து முனிவர்கள் செருக்கினை அடக்கிய புகழை உடையதும், பால்குடம் சுமர்ந்து சென்ற இராமக்கோன் என்ற அன்பரை இறைவன் மூங்கில் வடிவாக இருந்து இடறிவிட்டு பாலை தன்மேல் கவிழச் செய்து அதனால் வெட்டுண்டு காட்சியருளிய பெருமையுடையதும், திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற பெருமையுடையதும் ஆகிய பற்பல சிறப்புக்கள் நிறைந்த இப்புண்ணியதலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாகிய சிவபெருமான் உயிர்களின் மூவகைக் கட்டுகளாகிய அரவணங்களைத் தகர்த்தெறிந்த செயலை விளக்குவதாகிய திரிபுரம் எரித்த வரலாற்றின்படி அப்போது தேர் ஏறி வந்த திருக்கோலத்தை நினைவூட்டிக் காட்டுவதாகிய தேர்த் திருவிழா அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவில் ஆனி பெரும்தேரோட்டத் திருவிழா கடந்த 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்று வந்தது.

விழாவின் 8-ம் நாளான நேற்று காலை 8 மணிக்கு சுவாமி நடராச பெருமான் பச்சை சாத்தி எழுந்திருந்து திருவீதியுலாவும், மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதியுலாவும், இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதியுலா, சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்மன் தங்கக்கிளி வாகனத்திலும் திருவீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்குமேல் 4 மணிக்குள் சுவாமி அம்மன் தேரில் எழுந்தருளினர். காலை 7.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார், ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள் அப்துல்வகாப், நயினார் நாகேந்திரன், ரூபி மனோகரன், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். சிலம்பரசன் உள்ளிட்டோர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாநகர காவல்துறை ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, மாநகர காவல் துணை ஆணையர் டாக்டர் வி.பிரசன்னகுமார், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, உதவி ஆட்சியர் (பயிற்சி) தவலேந்து, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதாபிரியதர்ஷினி, நெல்லை மண்டல குழுத்தலைவர் செ.மகேஷ்வரி உட்படபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேரோட்ட திருவிழா பக்தர்கள் முழக்கத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இன்று 519 வது தேரோட்ட திருவிழாவில் கலந்து கொண்டு சுவாமி தேரினை வடம் பிடித்து தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆசியாவிலே மூன்றாவது பெரிய திருத்தேர் அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருத்தேராகும். ரூ.59 இலட்சம் செலவில் புதியதாக ஸ்ரீசண்டிகேஸ்வரர் திருத்தேர் செய்யப்பட்டுள்ளது. ரூ.6.50 இலட்சம் மதிப்பில் சுவாமி மற்றும் அம்பாள் தேருக்கு புதியதாக 6 வடகயிறுகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ரூ.43 இலட்சம் மதிப்பில் சுவாமி தேர், விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேருக்கு புதியதாக மரக்குதிரை, மர பிரம்மா, அம்பாள் தேருக்கு மரத்தினால் பிரம்மா மற்றும் மர யாழியும் செய்யப்பட்டுள்ளது. ரூ.5.54 இலட்சம் மதிப்பில் விநாயகர் தேருக்கு புதியதாக இரும்பு சக்கரம் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. ரூ.9.92 இலட்சம் மதிப்பில் சுவாமித்தேர், அம்பாள் தேர், விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேருக்கு புதியதாக தேர் துணி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

ரூ.37.60 இலட்சம் செலவில் புதிய திருத்தேர் கொட்டகைகள். ரூ.1.43 கோடி மதிப்பில் அம்மன் சன்னதி மேற்கூரையில் தட்டோடு பதிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. ரூ.99 இலட்சம் மதிப்பில் அம்மன் சன்னதி வளாகத்தில் இரண்டாம் பிரகாரம் கல்மண்டபம் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. ரூ.32.60 இலட்சம் மதிப்பில் பக்தர்களின் பொருட்களை பாதுகாக்கும் வகையில் பொருட்கள் வைப்பறை, மற்றும் காலணிகள் பாதுகாப்பகம். ரூ.14.70 இலட்சம் மதிப்பில் புதிய கழிவறைகள், ரூ.1.60 கோடி மதிப்பில் கருஉருமாறி தீர்த்தக்குளம் புனரமைக்கும் பணிகள் (40% நிறைவு). சட்டமன்ற அறிவிப்பின்படி, ரூ.5 கோடி செலவில் 450 கிலோ வெள்ளியை கொண்டு புதிய வெள்ளித்தேர். ரூ.35 இலட்சம் செலவில் வெள்ளித்தேருக்கான மரத்தேர் பணி நிறைவு. வரும் அக்டோபர் 2025 -க்குள் வெள்ளோட்டம்.

ரூ.1.80 கோடி மதிப்பில் புதியதாக ஓதுவார் பயிற்சி பள்ளிக்கு சுற்றுச்சுவர். கட்டடம், சமையல் அறை மற்றும் ரூ.5.25 கோடி மதிப்பில் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டும் பணி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 27.05.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. ஸ்ரீ காந்தி அம்பாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி விடுதி 100 மாணவிகளுக்கு கட்டணமில்லாமல் உணவு உறைவிடம். திருவிழா நாட்களில் அன்னதான திட்டம் தினசரி 100 நபர்களில் இருந்து 500 நபர்களுக்கு உயர்வு, ரூ.30 இலட்சம் மதிப்பில் இத்திருக்கோயில் பாதுகாப்பினை பலப்படுத்தும் வகையில் புதிய கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

தேரோட்டத்தையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, நெல்லையப்பர் கோவில் வளாகம் முழுவதும், கிழக்குரதவீதி, மேற்குரதவீதி கீழ்புறம், மேற்குமாடவீதி, வடக்குரதவீதி, தெற்குரதவீதி வடபுறம், மார்க்கெட், போலீஸ் குடியிருப்பு, அண்ணாதெரு, தமிழ்சங்கம் தெரு, ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory