» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் பொருநை அருங்காட்சியகம், நவீன நூலகம்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திங்கள் 5, மே 2025 3:30:21 PM (IST)

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் மற்றும் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகம் அமையவுள்ள இடங்கள் தொடர்பாக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், குலவணிகர்கிராமம், பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், பாளையங்கோட்டை மாவட்ட தொழில் மையம் அருகில் 3 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகம் அமைப்பதற்கான இடங்கள் தொடர்பாக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் எஸ்.மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் இன்று (05.05.2025) பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து தமிழர்களுடைய அடையாளங்கள் உலகத்திற்கே தெரிய வேண்டுமென்ற நோக்கில் பல்வேறு முன்னெடுப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதனடிப்படையில், கீழடியில் தமிழர்களுடைய வரலாற்று அடையாளங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பொருநை அருங்காட்சியகம் கட்ட வேண்டுமென்று சட்டமன்ற பேரவையில் 09.09.2021 அன்று அறிவித்தார்கள்.
தொடர்ந்து, தமிழகத்தின் தொன்மையான வரலாற்றினை உலகரிய செய்யும் பொருட்டு கொற்கை, ஆதிச்சநல்லூர், சிவகளை ஆகிய இடங்களில் கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்திட திருநெல்வேலி மாவட்டம் குலவணிகர்புரம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 18.05.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. பொதுப்பணித்துறை சார்பில் ரூ.56.57 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஏறத்தாழ 13 ஏக்கர் நிலத்தில் 54 ஆயிரம் சதுர அடியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆதிச்சநல்லூர் தொகுதி A மற்றும் B கட்டடம் 16,486 சதுர அடியில் தரைதளம் மற்றும் முதல் தளமும், சிவகளை கட்டடம் 8,991 சதுர அடியில் தரைதளம், முதல் தளமும், கொற்கை தொகுதி A மற்றும் B கட்டடம் 17,429 சதுர அடி தரைதளம், முதல் தளமும் எனவும், மேலும், அறிமுக காட்சி கட்டடம், கைவினை பொருட்கள் பணிமனை, ஒப்பனை அறைகள் கட்டங்களும் கட்டப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு கட்டடத்திற்கு இணைப்பு சாலை அமைக்கவும், அழகுநிறைந்த குளமும், குளத்தின் மீது பாலம் அமைக்கவும், சுற்றுச்சுவர், பூங்காக்கள், வண்ண விளக்குகள், நீறுற்று, சுற்றுச்சூழல் திறந்தவெளி திரையரங்கு அமைப்புகள் போன்ற பல்வேறு பணிகள் மக்களை கவரும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வயதானவர்கள் சென்று பார்க்கும் வகையில் பேட்டரியால் இயங்கும் வாகன வசதி செய்துதரப்படவுள்ளது. அனைத்து பணிகளும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவுபெற்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்படும்.
திருநெல்வேலி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மேற்குபுறவழிச்சாலை 33 கி.மீ அமைக்கப்படவுள்ளது. முதல்கட்டமாக 12.093 கி.மீ புறவழிச்சாலைக்கு ரூ.180 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு, கொங்கந்தான்பாறை விலக்கிலிருந்து சுத்தமல்லி வரைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2-வது கட்டமாக சுத்தமல்லி முதல் இராமையன்பட்டி வரை நிலமெடுப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இப்பணிக்கு ரூ.225.47 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மீதமுள்ள புறவழிச்சாலை பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைந்து பணிகள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
குலவணிகர்புரம் இரயில்வேகிராசிங் இடத்தில் ஒய் (Y) வடிவப்பாலம் கட்ட வேண்டுமென்று அறிவிக்கப்பட்டு, ரூ.93 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. அதற்கான நிலஎடுப்பு பணிகள் முடிவடைந்தவுடன் இப்பணிகள் தொடங்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று பல்வேறு நூலகங்களை கட்டி தந்துள்ளார்கள். அதனடிப்படையில் மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மற்றும் திருச்சியில் நூலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில் திருநெல்வேலி மாவட்டத்தில் நவீன நூலகம் கட்டப்படும் என்றும், அதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார்கள். அதனடிப்படையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நூலகம் கட்டுவதற்கான இடத்தினை தேர்வு செய்யப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களிலுள்ள அனைத்துத்தரப்பு மக்களும், மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த நூலகம் அமையவுள்ளது. கலைக்கல்லூரி, மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி என அனைத்து மாணவர்களும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில் இந்த நூலகம் அமையும். இந்த நூலகத்தில் மினி திரையரங்கம், ஆடிட்டோரியம், மாற்றுத்திறனாளிகளுக்கென தனி அறை போன்ற எண்ணற்ற வசதிகளுடன் அமையவுள்ளது. இந்த நூலகத்திற்கான மாதிரி வரைப்படம் தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு, டெண்டர் கோரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
நெடுஞ்சாலைகள் துறையின் சார்பில் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சாலை விபத்துகள் குறைந்துள்ளது. சாலை விபத்துக்கள் குறைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்கள்.
ஆய்வின்போது, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, முன்னாள் சட்டமன்ற பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் ப.செல்வராஜ், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், திருநெல்வேலி கோட்டாட்சியர் (பொ) வள்ளிகண்ணு, கண்காணிப்பு பொறியாளர்கள் (கட்டிடங்கள்) ஆல்வின் ஞான சேகரன், ஸ்ரீதரன், செயற்பொறியாளர்கள் பாண்டியராஜன், ஜோசப் ரன்சட் பெரிஸ், திரு ஸ்ரீராம், உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளா ரயில்களின் கக்கூஸ் ஆக மாறுகிறது நெல்லை : பயணிகள் சங்கம் கண்டனம்
திங்கள் 5, மே 2025 12:53:16 PM (IST)

மயான வேட்டைக்கு சென்ற சாமியாடி திடீர் சாவு: நெல்லை அருகே பரபரப்பு!
ஞாயிறு 4, மே 2025 9:28:26 AM (IST)

தாழையூத்து மேம்பாலத்தில் வாகன விபத்து : பள்ளி தலைமை ஆசிரியர் பரிதாப சாவு
சனி 3, மே 2025 3:26:17 PM (IST)

செங்கோட்டை அருகே ரயிலில் கடத்திய ரூ.34 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: 2 பேர் கைது!!
சனி 3, மே 2025 8:52:03 AM (IST)

ஜவகர் சிறுவர் மன்றத்தில் மாணவர்களுக்கு கலைப் பயிற்சி முகாம் :ஆட்சியர் தகவல்
வெள்ளி 2, மே 2025 3:45:52 PM (IST)

பைக் மீது தனியார் பஸ் மோதி ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
புதன் 30, ஏப்ரல் 2025 9:34:52 PM (IST)
