» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தனியார் பள்ளி நிர்வாகி வீட்டில் 100 பவுன் நகை, ரூ.20 லட்சம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை
திங்கள் 30, ஜூன் 2025 8:40:03 AM (IST)
ஆலங்குளம் அருகே தனியார் பள்ளி நிர்வாகி வீட்டில் 100 பவுன் நகை, ரூ.20 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். உறவினரின் திருமணத்துக்கு சென்றதை நோட்டமிட்டு கைவரிசை காட்டினர்.
 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலபட்டினத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் அப்பகுதியில் நெல்லை- தென்காசி மெயின் ரோட்டில் தனியார் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். மேலும் பள்ளிக்கூட வளாகத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளி, பி.எட். கல்லூரி ஆகியவற்றையும் நடத்தி வருகிறார்.
 ராஜசேகர், சென்னையில் தொழில் செய்து வருவதால் பள்ளிக்கூடங்கள், கல்லூரியின் நிர்வாகத்தை அவருடைய மனைவி ராஜேஸ்வரி மற்றும் மகன்கள் கவனித்து வருகின்றனர். இவர்களது வீடு, பள்ளிக்கூட வளாகத்திலேயே பின்பகுதியில் உள்ளது.
 கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த உறவினரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக ராஜேஸ்வரி குடும்பத்தினருடன் சென்றார். பின்னர் நேற்று காலையில் அவர்கள் தங்களது வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டில் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், துணிகள் சிதறி கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பீரோக்களில் இருந்த சுமார் 100 பவுன் தங்க நகைகள், ரூ.20 லட்சம் கொள்ளை போனது தெரிய வந்தது.
 இதுகுறித்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் நைசாக மாடி வழியாக ஏறி வீட்டுக்குள் நுழைந்தனர். பின்னர் பீரோக்களை உடைத்து திறந்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
 கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிதுதூரம் ஓடியது. ஆனாலும் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பார்வையிட்டு போலீசார் ஆய்வு செய்தனர். பள்ளிக்கூடங்கள், கல்லூரியில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால், ராஜேஸ்வரியின் வீட்டில் அதிகளவு பணம் இருக்கும் என்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
 இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மநபர்களை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். ஆலங்குளம் அருகே பள்ளி உரிமையாளர் வீட்டில் 100 பவுன் நகை, ரூ.20 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுரை ரயில்வே கோட்டத்தை சென்னை தேர்வு வாரியத்துடன் இணைக்க வேண்டும்: முதல்வரிடம் கோரிக்கை!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:37:06 AM (IST)

நெல்லை அருகே வாலிபர் கழுத்தை இறுக்கி படுகொலை : அக்காள் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:22:08 AM (IST)

நெல்லையப்பர் கோவிலுக்கு குட்டி யானை வாங்குவதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
வியாழன் 30, அக்டோபர் 2025 8:24:50 AM (IST)

தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய 2 மின்வாரிய அதிகாரிகளுக்கு சிறை தண்டனை
வியாழன் 30, அக்டோபர் 2025 8:17:13 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் : சபாநயாகர் அப்பாவு ஆய்வு
புதன் 29, அக்டோபர் 2025 4:26:53 PM (IST)

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் நவ.1-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
புதன் 29, அக்டோபர் 2025 11:37:25 AM (IST)




