» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஏஐ தொழில்நுட்பம் இல்லாத துறையே இல்லை : கனிமொழி எம்பி பேச்சு
திங்கள் 14, ஜூலை 2025 8:45:26 PM (IST)

ஏஐ தொழில்நுட்பம் மருத்துவத்துறை, அறுவைசிகிச்சை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது என்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி வளாக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் இன்று (14.07.2025) தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் மாணவ மாணவியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence) தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் பார்வையிட்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்ததாவது:- இன்றையதினம் ஏஐ பயிற்சி குறித்த நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பள்ளிக்கூடத்திற்குள் நுழைகின்ற பொழுது பறை, சிலம்பம், மேளம் உள்ளிட்ட நமது கலைகள் மூலம் வரவேற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏஐ தொழில்நுட்பம் என்று குறிப்பிடும் பொழுது இனி வருங்காலங்களில் எது ஏஐ தொழில்நுட்பம்? எது ஏஐ தொழில்நுட்பம் அல்லாதது? என்று கண்டுபிடிக்க முடியாத வாழ்க்கை முறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இந்த சமூகத்திற்குள் வாழும் பொழுது நமக்கு அது வாழ்க்கையின் இன்றியமைதாதாக மாறிவிடும்.
குறிப்பாக, நாம் இணையதளங்களில் ஒரு பொருள் குறித்து தேடுகின்ற பொழுது திரும்ப திரும்ப தேடுகின்ற நிலை ஏற்படும். ஆனால் சாட் ஜிபிடி உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்பங்களில் அவ்வாறு இல்லாத நிலை ஏற்படுகிறது. நமது மனநிலைக்கு ஏற்றாற்போல் எழுத்து, செய்திகள் உள்ளிட்டவற்றை அது புரிந்து கொள்ளும். இறுதியாக எதை சொல்ல வேண்டும் என்பதை முடிவெடுப்பது நீங்கள் தான். எந்த துறையாக இருந்தாலும், சாட் ஜிபிடி உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்பங்களில் முறையாக கேள்வியை வைக்கின்ற பொழுது அது சில பதில்களை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக அளிக்கும். இதன்மூலம் காலத்தை சேமிக்க முடிகிறது. குறிப்பாக இத்தொழில்நுட்பம் வாயிலாக அடிப்படையில் உள்ள அதிகமான விஷயங்களை உருவாக்குவதற்கான நேரத்தை குறைத்து கொடுக்கிறது.
இந்த தொழில்நுட்பம் மருத்துவத்துறை, அறுவைசிகிச்சை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்கள் சில செயல்களை துல்லியமாக செயல்படுத்த முடியாது. அதுபோன்று துல்லியமாக இத்தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்த முடியும். ஆனாலும், மனிதர்கள் இல்லாமலும் அந்த செயல்களை செய்ய முடியாது. இன்றைய காலகட்டங்களில் ஏஐ தொழில்நுட்பம் இல்லாத துறையே இல்லை என்ற அளவிற்கு வந்துவிட்டது. இனிவரும் காலங்களில் விவசாயம், எழுத்தாளர் உள்ளிட்ட அனைத்து வகையிலும் ஏஐ தொழில்நுட்பத்துடன் இணைத்து செயல்படுகின்ற நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். இன்றைக்கு உலகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து பயிற்சி பள்ளிகளிலிருந்து கற்று கொள்கின்றனர்.
நமது மாணவர்களும் இது குறித்து அறிந்து கொள்ள வேண்டும் எனவும், பின்தங்கி விடக்கூடாது என்பதற்காக ஏஐ தொழில்நுட்பம் குறித்த பயிற்சி நிகழ்ச்சி இன்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வருங்காலங்களில் நீங்கள் இந்த துறையை தேர்ந்தெடுக்கலாம் அல்லது இது குறித்து நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள துறைகளில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை புரிந்து கொள்ள முடியும். எந்தவித தயக்கமும் இல்லாமல் நீங்கள் கற்றுக் கொள்ளவேண்டும். உங்கள் சந்தேகங்களை நீங்கள் தெரிந்து கொண்டால் அடுத்த கட்டத்திற்கான பயிற்சிகளுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
நாம் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு ஏஐ தொழில்நுட்பம் நமது வாழ்விற்குள் வந்து கொண்டிருக்கிறது. நமது உரையாடலுக்கு கூட சாட்ஜிபிடி, ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் உள்ளது. மனித உறவுகளை மாற்றுவதற்கு எதுவுமே கிடையாது. மனிதர்களுக்கு யாருடைய தேவையும் இருக்காது என்ற சூழ்நிலை வரவே இயலாது. உருவாக்கவும் முடியாது. குறிப்பாக இந்த ஏஐ தொழில்நுட்பம் மூலமாக தலைவர்கள் உள்ளிட்டவர்களின் முகத்தை வைத்து பேசாதவற்றை பேசியதாக மாற்றி சமூக வலைதளங்களில் வெளிவரக்கூடிய நிலை இருக்கிறது.
இது குறித்து அறிந்து கொண்டு இதை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு சட்டம் இயற்றுகிறவர்களாக நீங்கள் வரவேண்டும். இதை தவறாக பயன்படுத்துகிறவர்களிடமிருந்து இந்த சமூகத்தை காப்பாற்றக்கூடிய தொழில்நுட்பம் குறித்தும், இந்த சமூகத்திற்கு பயன்பெறக்கூடிய தொழில்நுட்பத்தை உருவாக்குகிறவர்களாகவும் நீங்கள் வருவதற்கு இது ஒரு வழியாக இருக்கும் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது : தூத்துக்குடி மாதிரிப்பள்ளியில் ஏஐ தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சி இன்றையதினம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து கடந்த மூன்று மாதங்களாக எண்ணிக் கொண்டிருந்தோம். இந்த தொழில்நுட்பத்தின் தேவை, மாணவர்கள் ஏன்? இவர்கள் இதை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறித்த்து தான் இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
ஏஐ தொழில்நுட்பம் குறித்து மாணவர்கள் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உயர்கல்வி முடித்து விட்டு வருகின்ற பொழுது இந்த உலகத்தை ஆட்சி செய்கின்ற பல்வேறு தொழில்நுட்பங்களில் ஏஐ தொழில்நுட்பம் மிக அதிகமாக இருக்கும். நாம் செய்கின்ற பெரும்பான்மையான வேலைகளில் இத்தொழில்நுட்பத்தின் உதவியுடன் தான் செய்வோம். ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுக்கு பதிலாக இடங்கொள்ளும் என்று குறிப்பிடுவார்கள்.
ஆனால் ஏஐ தொழில்நுட்பம் தெரிந்த மனிதர்கள் உங்களுக்கு பதிலாக இடங்கொள்ளுவார்கள் என்று குறிப்பிடலாம். எனவே, ஏஐ தொழில்நுட்பம் குறித்து இப்பொழுது இருந்தே நீங்கள் உங்கள் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு ஏதுவாக கற்றுக் கொள்ள தயாராக வேண்டும். அடிப்படைக்கான கல்வி கூறுகளை முழுவதும் ஏஐ தொழில்நுட்பம் கற்றுக் கொடுக்காமல், நமக்கு புரிகின்ற மாதிரி எத்தனை முறை வேண்டுமானாலும், எளிமையாக கற்றுக் கொள்வதற்கு செய்முறை விளக்கங்களுடன் புரிந்து கொள்ளுவதற்கு எதுவாக ஏஐ தொழில்நுட்பம் கற்றுக் கொடுக்கும்.
ஏஐ தொழில்நுட்பம் குறித்து பல மில்லியன் பயன்பாடுகள் உள்ளது. குறிப்பாக நாம் இயல்பாக செய்கின்ற செயலை ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் செய்கின்ற பொழுது ஐந்து மடங்கு வேகமாக செய்து முடிக்கலாம். குறிப்பாக நமது அலுவலகங்களில் நீதிமன்றங்களுக்கு வழக்குகள் தயாரித்து வழங்க வேண்டும். வழக்குகளுக்கு எதிரான பதில்கள் தயாரிப்பது என்பது முக்கியமானதாகும். இது குறிப்பிட்ட சிலர் மட்டுமே தெரிந்து வைத்திருப்பார்கள். இதனால் கால தாமதம் ஏற்படும். ஆனால் இதை தவிர்க்க கடந்த எழு மாதங்களுக்கு முன்னர் ஏஐ தொழில்நுட்பத்துடன் இதற்கு பதில் தயார் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு பின்னர் அலுவகத்தில் இருந்த அனைத்து வழக்குகளுக்கும் எதிரான பதில்கள் இரண்டு மாதங்களிலேயே கோப்புகள் தயார் செய்யப்பட்டு முடிக்கப்பட்டது.
ஏஐ தொழில்நுட்பம் நமது காலத்தை சேமிக்கவும், வேலைத்திறனை பல மடங்கு உயர்த்துவதற்கு பயன்படும். இதுமட்டுமின்றி கணினித்துறை, ஊடகத்துறை உள்ளிட்ட பல துறைகளில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய பாடம் சம்பந்தமான கருத்துக்களை மிக எளிதாக எவ்வாறு கற்றுக் கொள்ள முடியும் என்பதையும், உதாரணத்துடன் மற்றும் செய்முறை விளக்கங்களுடன் நீங்கள் கற்க வேண்டும். எதிர்காலத்தில் நீங்கள் அதிகமாக இதுகுறித்து கற்றுக் கொள்வீர்கள். உலகத்தில் உள்ள அனைத்து அறிவையும் அதற்குள் புகுத்து வைத்திருக்கிறார்கள்.
நீங்கள் சரியான முறையில் கேட்கின்ற பொழுது அது உங்களுக்கு சரியான தகவல்களை எடுத்துக் கொடுக்கும். மாணவர்களாகிய நீங்கள் கல்லூரி படிப்பை முடிக்கின்ற பொழுது மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருக்கும். இப்பொழுதிருந்து நீங்கள் கற்கின்ற பொழுது ஏஐ தொழில்நுட்பம் குறித்த அறிவு வளர்ச்சி மிக எளிதாக இருக்கும். எனவே, இந்த வாய்ப்பை மாணவர்களாகிய நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மேயர் பெ.ஜெகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் து.கணேசமூர்த்தி, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ரத்தினசங்கர், மாதிரி பள்ளி தலைமையாசிரியர் கஜேந்திர பாபு, ஆசிரியர்கள், ஏஐ பயிற்றுநர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எல்.ஐ.சி. ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 14, ஜூலை 2025 8:46:24 AM (IST)

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)
