» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆவணி மூலத் திருவிழா: கருவூர் சித்தருக்கு ஜோதிமயமாய் காட்சியளித்த நெல்லையப்பர்!
புதன் 3, செப்டம்பர் 2025 11:45:58 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவில் கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பன் ஜோதிமயமாய் காட்சி அளிக்கும் வைபவம் நடந்தது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவானது, நெல்லையப்பர் கோவில் மற்றும் மானூர் அம்பலவாண சுவாமி கோவில் ஆகிய இரு கோவில்களை இணைத்து நடைபெறும் திருவிழாவாகும்.
நெல்லையப்பர் கோவிலுக்கு வந்து தாம் அழைத்தவுடன் நெல்லையப்பரின் காட்சி கிடைக்காததால் சினமடைந்த கருவூர் சித்தர், ‘‘ஈசன் இங்கு இல்லை, எருக்கும், குறுக்கும் எழுக’’ என சாபமிட்டு மானூர் சென்றார். சித்தரின் பெருமையை உலகிற்கு உணர்த்திடவும், சித்தரை சாந்தப்படுத்தி சாப நிவர்த்தி பெறவும், நெல்லையப்பர் தனது பரிவாரங்களுடன் மானூர் வந்து சித்தருக்கு காட்சியளித்து சாப விமோசனம் பெறுவதே ஆவணி மூலத்திருவிழாவாகும்.
நேற்று முன்தினம் நள்ளிரவு நெல்லையில் இருந்து பாண்டியராஜன், சண்டிகேஸ்வரர், அகத்தியர், குங்கலிய நாயனார், தாமிரபரணியம்மன் என தனது பரிவாரங்களுடன் புறப்பட்ட நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் ராமையன்பட்டி வந்தனர். அங்கு முறையே சந்திரசேகரர், பவானி அம்மனாக மாறி நேற்று காலையில் மானூர் வந்த சுவாமி, அம்பாளை ஊர் எல்லையில் கோவில் நிர்வாக அதிகாரி, உள்ளூர் பிரமுகர்கள், பக்தர்கள் திரளாக வரவேற்றனர்.
தொடர்ந்து கோவில் எல்லைக்கு வந்த சுவாமி, அம்பாளை கருவூர் சித்தர் எதிர்கொண்டு அழைத்தார். பின்னர் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு முன்பாக திருமுறை பாராயணம் செய்யப்பட்டதுடன், ஆவணி மூலத்திருநாள் பாடல் பாடப்பட்டது. காலை 8 மணியளவில் கருவூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் ஜோதிமயமாய் காட்சியளித்தார். அதனை திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு வணங்கி வழிபட்டனர்.
பின்னர் அங்குள்ள ஆவணி மூல மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாளுக்கு வேதபாராயணங்கள் முழங்க சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அதன்பின் சாந்தமடைந்த கருவூர் சித்தரையும் உடன் அழைத்துக்கொண்டு சுவாமி நெல்லையப்பர், அம்பாள் மற்றும் பரிவாரங்களுடன் நெல்லை புறப்பட்டுச் சென்றார்.
வழியில் ராமையன்பட்டியில் வைத்து மீண்டும் நெல்லையப்பர், காந்திமதி அம்பாளாக மாறி நெல்லை வந்தனர். அங்கு தொண்டர்கள் நயினார் கோவிலின் முன்பாக கருவூர் சித்தர் கொடுத்த சாபத்தை நிவர்த்தியளிக்க செய்து அருளினர். திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 8:52:42 AM (IST)

தென்காசியில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 வீரர்கள் ராணுவத்திற்கு தேர்வு..!!
புதன் 24, டிசம்பர் 2025 11:59:50 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் சுகுமார் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:38:30 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி: கட்டணம் நிர்ணயம்!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:01:26 PM (IST)

