» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழகத்தில் வாக்கு திருட்டு நடக்க வாய்ப்புள்ளது : நெல்லை காங்கிரஸ் மாநாட்டில் ப.சிதம்பரம் பேச்சு!
திங்கள் 8, செப்டம்பர் 2025 8:45:19 AM (IST)
தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது. எனவே தமிழகத்தில் வாக்கு திருட்டை அரங்கேற்ற விடமாட்டோம்” என்று நெல்லையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
 காங்கிரஸ் கட்சி சார்பில், ‘‘வாக்கு திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை காப்போம்’’ என்ற அரசியல் மாநாடு நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ரூபி. மனோகரன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசினார். ராபர்ட் புரூஸ் எம்.பி. தொடக்க உரையாற்றினார்.
 முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், தேசிய நிர்வாகிகள் கிரிஷ் சோடங்கர், பவன் கேரா, சூரஜ் எம்.என்.ஹெக்டே ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இந்த மாநாட்டில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: கர்நாடக மாநிலம் மகாதேவபுரா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஒரு சட்டமன்ற தொகுதியில் மட்டும் 1 லட்சம் வாக்குகள் முன்னிலை என தேர்தல் ஆணையம் சொன்னதை ஆராய்ந்து தான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு நடந்ததை வெளிக்கொண்டு வந்தார்.
 மகாதேவபுரா தொகுதியில் பலருக்கு ஒரே எழுத்தில் பெயர் இருந்தது. பலருக்கு கதவு எண் பூஜ்ஜியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் 120 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். இதையெல்லாம் அம்பலப்படுத்திய பிறகும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த மறுக்கிறது. இதனால் அந்த சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய நாடாளுமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சி இழந்தது.
 போலியான முகவரியில், போலியான நபர்களை சேர்ப்பது போன்ற வகையில் வாக்கு திருட்டு நடத்தப்பட்டது. அவர்கள் பெயரில் பா.ஜனதா கட்சியினர் வாக்களித்து தேர்தல் நடந்தது. ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் நூற்றுக்கணக்கான நபர்கள் குடிபெயர்ந்து விட்டனர், காணாமல் போய்விட்டனர், மறைந்துவிட்டனர் என தேர்தல் ஆணையம் இயற்கைக்கு மாறான தில்லுமுல்லு செய்துள்ளது.
 பீகார், மராட்டியம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் நடந்தது போல் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இருப்பதால் இங்கேயும் வாக்கு திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தமிழகத்தில் வாக்குதிருட்டை அரங்கேற்ற விடமாட்டோம். அதேபோல் கேரளாவிலும் நடக்காது. வருகிற மே மாதம் வரை தமிழகத்தில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
 தவறான ஒருவரை சேர்க்கவும், சரியான நபரை நீக்கவும் அனுமதிக்க கூடாது. வாக்கு திருட்டுக்கான காரணம் பாரதீய ஜனதா கட்சியும், தேர்தல் ஆணையமும் கூட்டணி வைத்துள்ளதுதான். தற்போது பா.ஜனதாவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த டி.என்.சேஷன் இருந்த தேர்தல் ஆணையம் தற்போது கோமாளிகளால் நடத்தப்படுகிறது.
 இன்னும் 8 மாதங்கள் விழிப்புடன் இருந்து வாக்குத்திருட்டை தடுத்து தமிழகத்தில் நியாயமான தேர்தலை நடத்த உறுதுணையாக இருக்க வேண்டும். தி.மு.க. தமிழகத்தில் வலிமையான கூட்டணியாக உள்ளது. ஆனால் அ.தி.மு.க. வலிமை குறைந்தது என மதிப்பிட மாட்டேன். தமிழகத்தில் கட்டுகோப்பான அணிகள் உள்ளன. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க என 2 அணிகள் இருந்தால் வாக்கு திருட்டு நடக்காது. ஆனால் தற்போது அ.தி.மு.க அணியில் பா.ஜனதா புகுந்துள்ளது. ஆமை புகுந்த வீடு உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது. அதேபோல் பா.ஜனதா புகுந்த இடம் உருப்படாது. அவர்களது கூட்டணியும் உருப்படாது. இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
 இந்த மாநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், எஸ்.எஸ்.ராமசுப்பு, எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஜோதிமணி, விஷ்ணு பிரசாத், கார்த்தி சிதம்பரம், கோபிநாத், சசிகாந்த் செந்தில், சுதா ராமகிருஷ்ணன், மாநில சிறுபான்மைப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ஊர்வசி அமிர்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் நன்றி கூறினார்.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)




