» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முதுகலை ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வில் முறைகேடா? ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை

திங்கள் 13, அக்டோபர் 2025 8:46:05 AM (IST)

நெல்லையில் நடந்த முதுகலை ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வில் முறைகேடு நடந்ததா? என்பது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் முதுகலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் 18 மையங்களில் 5,075 பேர் தேர்வு எழுதினார்கள். பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் வேலூரை சேர்ந்த சிமியோன் (வயது 48) என்பவர் தேர்வு எழுத வந்திருந்தார்.

அவருக்கு தமிழ் மொழி பாடத்துக்கான வினாத்தாள் வழங்கப்பட்டது. ஆனால் அவர், வணிகவியல் பாடத்துக்கு விண்ணப்பித்து இருந்ததாகவும், தனக்கு வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் கூறினார். இதுபற்றி தகவல் அறிந்ததும் முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமார் அங்கு விரைந்து வந்து தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்டார். பின்னர் சிமியோனை அழைத்து விசாரணை நடத்தினார்.

முதலில் அவர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டாரா? என்று விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது உறுதியானது. எனினும் அவரது ஹால் டிக்கெட்டில் ஒரு இடத்தில் மொழிப்பாடம் என்றும், இன்னொரு இடத்தில் வணிகவியல் என்றும் இடம் பெற்றுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர் ஹால் டிக்கெட்டில் முறைகேட்டில் ஈடுபட்டாரா? என்றும் சந்தேகம் ஏற்பட்டது.

எனவே சிமியோனை கல்வித்துறை அதிகாரிகள் அழைத்து சென்று பாளையங்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவரை பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் இன்ஸ்பெக்டர் மகேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

வேலூரை சேர்ந்த சிமியோன் பாளையங்கோட்டையில் தேர்வு மையம் கேட்டு பெற்றதற்கான காரணம் என்ன? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவரது கல்வி சான்றிதழ், விண்ணப்ப நகல், ஹால் டிக்கெட் எண் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அனைத்தையும் ஆய்வு செய்தபிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கல்வி அதிகாரி விளக்கம்

இதுகுறித்து நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமார் கூறுகையில், ‘‘முதுநிலை ஆசிரியர் பணிக்கான எழுத்து தேர்வில் ஆள் மாறாட்டம் எதுவும் நடைபெறவில்லை. சிமியோன் என்பவர் தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளார். ஆனால் அவரது ஹால் டிக்கெட்டில் வணிகவியல் பாடம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை போலீசாரிடம் ஒப்படைத்து விட்டோம். போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள்’’ என்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory