» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு

வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரிய மனுக்களை பரிசீலிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காற்று, நீர், நிலம் ஆகியவைகளுக்கு மாசு ஏற்படுத்துவதாகக் கூறி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு மூடியது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிர்வகிக்கும் வேதாந்தா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து கடந்த 2020-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.

இந்தநிலையில், பசுமை தாமிரம் உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்க அனுமதி கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் புதிய வழக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ‘பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கேட்டு தமிழ்நாடு தொழில்துறை, சுற்றுச்சூழல் துறை செயலாளர்களுக்கு, கடந்த ஜூன் முதல் நவம்பர் வரை 6 மனுக்கள் அனுப்பியும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.

இந்த மனுக்களை பரிசீலிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும். பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய, மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளின் பிரதிநிதிகளை கொண்ட நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், ‘பசுமை தாமிர ஆலை அமைப்பது தொடர்பாக அரசுத்துறை செயலாளர்களுக்கு மனு மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதே தவிர, முறையாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விண்ணப்பிக்கவில்லை.

மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருந்து அபாயகரமான கழிவுகளை அப்புறப்படுத்தக்கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் பாத்திமா என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது’ என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த வழக்குடன், வேதாந்தா நிறுவனத்தின் இந்த புதிய வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் எனக்கூறி விசாரணையை 4 வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


மக்கள் கருத்து

THUMOTHERENDec 3, 1766 - 07:30:00 AM | Posted IP 162.1*****

BAN STERLITE

தாமோதரன்Dec 18, 2025 - 10:02:03 PM | Posted IP 172.7*****

தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணம் ஸ்டெர்லைட் மூடல். ஒரு கிராம் தங்கம் இன்று 12000 ரூபாய். எப்படியும் காப்பர் கலந்துதான் நகை கடைக்காரர்கள் தங்கம் அளிக்க போகிறார்கள். அந்த காப்பர் விலை உயர்வு நடுத்தர மக்களின் வாழ்வில் கனவில் கூட தங்கத்தை காணாத படி செய்து விட்டது. தூத்துக்குடி முத்து நகரம் மட்டும் அல்ல, இந்தியாவிற்கே தங்கத்தை அளித்த செம்பு நகரம்

makkalDec 18, 2025 - 09:22:54 PM | Posted IP 104.2*****

10 வருஷமா கழிவுகளை அப்புற படுத்துறாங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory