» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கர்ப்பிணி பெண் மர்மசாவில் திடீர் திருப்பம்: கொலை செய்து நாடகமாடிய அரசு ஊழியர் கைது!
செவ்வாய் 27, ஜனவரி 2026 7:48:56 AM (IST)
மானூர் அருகே கிணற்றில் கர்ப்பிணி மர்மமான முறையில் பிணமாக மிதந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவரை கழுத்தை நெரித்துக்கொலை செய்து நாடகமாடிய கணவரான அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே குப்பனாபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் அந்தோணி (25). இவர் ராமையன்பட்டி அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், மேல இலந்தைக்குளத்தைச் சேர்ந்த மோசே மகள் பாக்கியத்தாய்க்கும் (23) கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பாக்கியத்தாய் 2 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. இவர் நேற்று முன்தினம் மதியம் அப்பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், மானூர் போலீசார் விரைந்து சென்று, இறந்த பாக்கியத்தாயின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதாவது, திருமணமான சில நாட்களிலேயே மனைவி பாக்கியத்தாயை வேலைக்கு செல்லுமாறு கணவர் அந்தோணி கூறி வந்தார். ஆனால் அவர் மறுத்து விட்டார். இதனால் மனைவியின் வீட்டில் இருந்து கூடுதலாக நகை, பணம் வாங்கி வருமாறு கூறி அந்தோணி அடிக்கடி தகராறு செய்தாராம்.
நேற்று முன்தினம் காலையில் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு செல்லலாம் என்று கூறி மனைவி பாக்கியத்தாயை அந்தோணி அழைத்து சென்றார். பின்னர் அங்கிருந்து திரும்பி வரும் வழியில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அந்தோணி துண்டால் மனைவி பாக்கியத்தாயின் கழுத்தை நெரித்தார். இதில் அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை அங்குள்ள தோட்டத்தின் கிணற்றில் வீசி விட்டு சென்றார். மாலையில் மனைவி பாக்கியத்தாயை காணவில்லை என்று கூறி தேடுவது போன்று அந்தோணி நாடகமாடினார்.
மேலும் அவர் தனது தாயார் மூலம் மானூர் காவல் நிலையத்தில், மருமகளைக் காணவில்லை என்று கூறி புகார் கொடுக்க செய்தார். இதற்கிடையே பாக்கியத்தாயின் அண்ணன் அந்தோணியும் தனது தங்கையின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரிடம் கணவர் வீட்டார் கூடுதலாக 10 பவுன் நகை அல்லது ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் புகார் அளித்தார்.
தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பாக்கியத்தாயை அவரது கணவர் அந்தோணியே கழுத்தை நெரித்துக் கொன்று உடலை கிணற்றில் வீசி விட்டு, அவரை தேடுவது போன்று நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மானூர் அருகே திருமணமான 8 மாதங்களில் கர்ப்பிணி மனைவியை கணவரே கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு உடலை கிணற்றில் வீசிய பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசாணைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்: தென்காசி வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 5:16:31 PM (IST)

மூலைக்கரைப்பட்டி தான்தோன்றி குளம் தூர் வாரும் பணி துவக்கம்: விவசாயிகள் பெருமகிழ்ச்சி!!
வெள்ளி 19, ஜூன் 2026 3:43:39 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 11 மையங்களில் நீட் மறுதேர்வு: கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 11:41:46 AM (IST)

நெல்லை எக்ஸ்பிரஸை நிறுத்தி பெண் பயணியிடம் நகை பறிப்பு : ஆட்டோ ஓட்டுநர் கைது!
வியாழன் 18, ஜூன் 2026 5:54:36 PM (IST)

மருத்துவமனை லிஃப்ட்டில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது!
வியாழன் 18, ஜூன் 2026 8:27:23 AM (IST)

ஹெலிகாப்டரில் வந்த நீட் மறுதேர்வு வினாத்தாள்கள்: 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியாழன் 18, ஜூன் 2026 7:53:47 AM (IST)


