» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பணகுடி இராமலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திங்கள் 23, பிப்ரவரி 2026 12:14:04 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம், பணகுடியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு இராமலிங்க சுவாமி உடனுறை சிவகாமி அம்பாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நம்பிசிங்கப்பெருமாள் திருக்கோயில்களின் திருக்குட நன்னீராட்டு பெருவிழா (கும்பாபிஷேகம்) 17 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுமார் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆகம விதிகளின்படி தீர்த்தகுளம், மூலாலயம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், கொடிமரம், கோபுரங்கள் மற்றும் சுதை வேலைப்பாடுகள் என அனைத்தும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டன.
விழாவிற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 20-ம் தேதி விக்னேஷ்வர பூஜை, நவக்கிரக ஹோமம் மற்றும் சுதர்சன ஹோமத்துடன் தொடங்கின. நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று (22.02.2026) விழாவின் சிகர நிகழ்ச்சியான குடமுழுக்கு நடைபெற்றது.
மேளதாளங்கள் முழங்க, யாகசாலையிலிருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைக்க, சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்தனர். அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "ஓம் நமச்சிவாய", "கோவிந்தா" என பக்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதாபிரியதர்ஷினி, பணகுடி பேரூராட்சித் தலைவர் தனலட்சுமி, அறங்காவலர் குழு உறுப்பினர் சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். குடமுழுக்கிற்குப் பிறகு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு, பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்களால் அன்னதானம் தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய பேரவைத் தலைவர், "தற்போதைய அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் 3,500-க்கும் மேற்பட்ட பழமையான திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காகக் கோயில்களில் பல்வேறு சிறப்பான கட்டமைப்பு வசதிகளும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன" என்று குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)


