» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இரட்டைக்கொலை வழக்கு: குற்றவாளிகளான 9 காவலர்களுக்கும் மனநலப் பரிசோதனை!

சனி 28, மார்ச் 2026 12:07:45 PM (IST)

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கும், நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை அரசு மருத்துவமனையில் மனநலப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கடந்த 2020-ஆம் ஆண்டு ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாகக் கூறி போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணையின் போது போலீசார் நடத்திய கடுமையான தாக்குதலில் இருவரும் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

இவ்வழக்கில் தொடர்புடைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சிறப்புச் சார்பு ஆய்வாளர் பால்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், மார்ச் 23-ஆம் தேதி மதுரை நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பை வழங்கியது. அதில், வழக்கில் தொடர்புடைய 9 போலீசாரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் மார்ச் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

தண்டனை விவரத்தை அறிவிப்பதற்கு முன்பாக, குற்றவாளிகள் நீண்ட காலமாகச் சிறையில் இருப்பதால் அவர்களது உடல்நிலை மற்றும் மனநிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. "குற்றவாளிகளின் மனநிலை மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகள் குறித்துப் பரிசோதனை செய்து, மார்ச் 30-ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மதுரை மத்திய சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் 9 காவலர்களும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அங்குள்ள மனநலப் பிரிவில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு, பல்வேறு கட்டங்களாக உளவியல் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், "9 பேருக்கும் மனநலம் சார்ந்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் ஒரு நாள் அவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வாய்ப்புள்ளது. பரிசோதனைகள் நிறைவடைந்தவுடன், அதன் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்" எனத் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

அப்பாவிMar 28, 2026 - 12:42:37 PM | Posted IP 162.1*****

உருப்படியாக தூக்குல போடுங்க, அப்போதான் சில காவல்துறையினர் திருந்துவார்கள், அடுத்தடுத்து லாக் அப் மரணம் நடக்காது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory