» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அனிதா ராதாகிருஷ்ணன் மீது கருப்பு மை வீசிப் போராட்டம் : காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எச்சரிக்கை!

திங்கள் 18, மே 2026 3:34:44 PM (IST)

ராகுல் காந்தியை தரக்குறைவாகப் பேசி வரும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கருப்பு மை வீசிப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்டக் காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வடக்கு மாவட்டக் காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி பேசியதாவது: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அடைந்த படுதோல்வியின் காரணமாக, திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் முற்றிலும் தனது அரசியல் நிதானத்தை இழந்து, விரக்தியான நிலையில் பொது மேடைகளில் கொச்சையாகப் பேசி வருகிறார்.

காங்கிரஸ் கட்சியினரை அவர் 'துரோகிகள்' என்று நா கூசாமல் விமர்சிக்கிறார். ஆனால், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலம் தொட்டே, மத்தியில் பதவிகளையும் சுகங்களையும் அனுபவித்துவிட்டு, காங்கிரஸ் பேரியக்கத்திற்குத் தி.மு.க. செய்த துரோகங்கள் என்னென்ன என்பது இந்த ஊருக்கே நன்றாகத் தெரியும். இத்தகைய தி.மு.க.வின் தரம் தாழ்ந்த கொச்சைப் பேச்சுகளும், தலைவர்களின் அகங்காரமுமே தற்பொழுது அந்த இயக்கம் தமிழகத்தில் முழுமையாக அழிந்து போவதற்குக் முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.

கடந்த தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரைத் திட்டமிட்டுத் தோற்கடிப்பதற்காக, அ.தி.மு.க.வினருடன் கைகோர்த்துக்கொண்டு உள்ளடி வேலைகளில் ஈடுபட்டார். கடந்த காலங்களில் தங்களுக்குத் தேவை ஏற்படும்போதெல்லாம் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை டெல்லிக்குத் தூது அனுப்பி, காங்கிரஸ் கட்சியுடன் எப்படியாவது கூட்டணி வைக்க வேண்டும் என்று கெஞ்சிக் கூத்தாடி நின்றது இதே தி.மு.க.தான் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.

தென் மாநிலங்கள் முழுவதும் தற்பொழுது காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சிகள் மிக கம்பீரமாக அமைந்து வருகின்றன. அண்டை மாநிலமான கேரளாவிலும் இன்று காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. இத்தகைய சூழலில், 'தலைவர் ராகுல் காந்தியின் முகத்தில் கரியைப் பூசுவோம்' என்று அனிதா ராதாகிருஷ்ணன் பொது மேடையில் ஆபாசமாக முழங்கியுள்ளார்.

எங்கள் உலகளாவிய தலைவர் ராகுல் காந்தியைப் பற்றித் தரக்குறைவாகப் பேச அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எவ்விதத் தகுதியும் இல்லை. இதோடு அவர் தனது கொச்சைத்தனமான பேச்சுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். இனிமேலும் அவர் எல்லையை மீறிப் பேசினால், அவர் தூத்துக்குடி மாவட்டத்தின் எந்தப் பகுதிக்கு வந்தாலும், காங்கிரஸ் தொண்டர்களைத் திரட்டி அவர் மீது 'கருப்பு மை' வீசிப் போராட்டங்களை நடத்துவோம்" என எச்சரித்தார். இந்த நேரடி அரசியல் மோதல் தூத்துக்குடி மாவட்ட அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

thalaivargal katchiமே 18, 2026 - 04:31:09 PM | Posted IP 172.7*****

thalaivargal mattume ulla, thondargal illatha katchi congres......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory