» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வட்டாட்சியருக்கு 3 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
வியாழன் 28, மே 2026 9:28:37 AM (IST)
லாரியில் ஜல்லிக்கற்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்க 7ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், பெண் வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் செண்பகராஜ். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு புளியரை 'எஸ்' வளைவு அருகில் 'ஹாலோ பிளாக்' கற்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் உற்பத்திப் பணிகளுக்காக லாரியில் ஜல்லிக்கற்களை எடுத்துச் செல்ல அனுமதி கோரி, அப்போதைய செங்கோட்டை வட்டாட்சியராகப் பணிபுரிந்த ஸ்டெல்லா எஸ்தர் ராணியிடம் செண்பகராஜ் முறைப்படி மனு அளித்திருந்தார்.
ஆனால், ஜல்லிக்கற்களை லாரியில் கொண்டு செல்வதற்கான அனுமதி ஆவணங்களை வழங்க வட்டாட்சியர் ஸ்டெல்லா எஸ்தர் ராணி, செண்பகராஜிடம் ஏழாயிரம் ரூபாய் லஞ்சமாகத் தருமாறு கேட்டுள்ளார்.
அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத செண்பகராஜ், இதுகுறித்து நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் நிலையத்தில் ரகசியப் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கடந்த 26.11.2013 அன்று ரசாயனப் பவுடர் தடவிய ஏழாயிரம் ரூபாய் பணத்தை செண்பகராஜிடம் கொடுத்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பினர்.
செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து அந்த லஞ்சப் பணத்தை ஸ்டெல்லா எஸ்தர் ராணி வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவரைப் பாய்ந்து பிடித்து, கையும் களவுமாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான ஊழல் தடுப்பு வழக்கு தென்காசி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தது. சாட்சிகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆதாரங்களுடன் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று இவ்வழக்கில் நீதிபதி ராஜவேல் அதிரடித் தீர்ப்பு வழங்கினார்.
குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பெண் வட்டாட்சியர் ஸ்டெல்லா எஸ்தர் ராணி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் கூடுதல் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஜென்சி ஆஜராகி வாதாடினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு நியமனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:05:47 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)


