» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கார் மீது ஆட்டோ மோதி சாலையில் கவிழ்ந்து விபத்து; மும்பைப் பெண் பரிதாப பலி!

செவ்வாய் 21, ஜூலை 2026 8:39:03 AM (IST)

எட்டையபுரத்தில் கார் மீது ஆட்டோ மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மும்பையைச் சேர்ந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மும்பை டோம்பிவ்லி பகுதியைச் சேர்ந்த முத்துராஜன் மனைவி ராஜராஜேஸ்வரி (60). இவர் கடந்த 18-ஆம் தேதி மும்பையிலிருந்து புறப்பட்டு எட்டையபுரத்திலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். உறவினர்களைச் சந்தித்து நலம் விசாரித்துத் தங்கியிருந்த அவர், நேற்று மதியம் மீண்டும் மும்பைக்குப் புறப்பட்டார்.

இதற்காக எட்டையபுரத்திலிருந்து கோவில்பட்டி ரயில் நிலையத்திற்குச் செல்வதற்காக ஆட்டோவில் பயணித்துள்ளார். அந்த ஆட்டோவை எட்டையபுரம் அருகேயுள்ள சுரைக்காய்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (37) என்பவர் ஓட்டியுள்ளார்.

ஆட்டோ எட்டையபுரம் பேரூராட்சி மன்றம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவ்வலுவலக முன்பிருந்து ஒரு கார் திடீரென சாலையில் திரும்பியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாகக் கண் இமைக்கும் நேரத்தில் காரின் மீது ஆட்டோ மோதி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் ஆட்டோவில் பயணித்த ராஜராஜேஸ்வரி படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த எட்டையபுரம் காவல்துறையினர் விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றி, எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இவ் விபத்து குறித்து எட்டையபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டி வந்த எட்டையபுரம் அருகேயுள்ள முதலிபட்டியைச் சேர்ந்த காளிராஜிடம் (36) தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் வீட்டிலிருந்து ஊருக்குத் திரும்பிய வழியில் விபத்தில் சிக்கிப் பெண் பலியான சம்பவம் எட்டையபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

உண்மைJul 21, 2026 - 08:53:30 AM | Posted IP 104.2*****

சில ஆட்டோக்காரர்கள் எல்லாம் பெரிய BMW சொகுசு சார் நினைப்பு , சும்மா கண்ணாடியை பார்க்காமல், பின்னாடி வண்டிகள் வரும் கவனிக்காமல் , கண்டுக்காமல் அப்படியே திரும்புவார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory