» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை மழை வெள்ளத்தால் 2 லட்சம் வாகனங்கள் பழுது; மின்சாதனங்கள் சேதம்!

புதன் 6, டிசம்பர் 2023 12:39:27 PM (IST)

சென்னை மழை வெள்ளத்தால் 2 லட்சம் வாகனங்கள், மற்றும்  டி.வி., வாஷிங் மெஷின்,உள்ளிட்ட மின்சாதனங்கள்  சேதம் அடைந்துள்ளன. 

சென்னையில் புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப்போய் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திரும்பிய திசையெல்லாம் கடந்த 4 நாட்களாக வெள்ளக்காடாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. அடுக்குமாடி குடியிருப்புகளின் கீழ் தளத்தில் 'பார்க்கிங்' ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை தண்ணீரில் மூழ்கி முழுமையாக சேதம் அடைந்துள்ளன. 

சென்னை மாநகர பகுதிகள் மட்டுமின்றி தாம்பரம், புழல், வேளச்சேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களின் என்ஜினில் தண்ணீர் புகுந்தது. இதனால் சுமார் 2 லட்சம் வாகனங்கள் பழுதானது. மழை வெள்ளத்துக்கு பயந்து தங்களது வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை மேடான இடங்களில் கொண்டு போய் விட்டவர்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

மேடான பகுதிகளிலும் மழைநீர் புகுந்து பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியதால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தண்ணீரில் மூழ்கி பழுதானது. நேற்று முன்தினம் இரவுடன் சென்னையில் மழை ஓய்ந்திருந்ததை அடுத்து பொதுமக்கள் தங்களது வாகனங்களை போய் பார்த்து கண்ணீர் விட்டனர். பாதுகாப்பாக நிற்கும் என நினைத்து மேடான இடங்களில் கொண்டு போய்விட்ட வாகனங்களும் தண்ணீரில் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைத்தனர்.

தற்போது சென்னை மாநகரில் சில இடங்களில் தண்ணீர் வடிந்துள்ள நிலையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்குகளை தேடி அலைந்து தங்களது வாகனங்களை பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான இடங்களில் மெக்கானிக் கடைகளிலும் தண்ணீர் புகுந்துள்ளதால் வாகனங்களை உடனடியாக பழுது பார்க்க முடியவில்லை.

இருப்பினும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பழுது பார்க்கும் சில மெக்கானிக்குகள் வாகனங்கள் பழுதாகி நிற்கும் இடங்களுக்கு நேரில் சென்று பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், வீடுகளின் கீழ்த்தளத்தில் இருந்த டி.வி., வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களும் சேதம் அடைந்துள்ளன. கீழ்த்தளங்களில் வசித்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுபோன்ற பாதிப்புகளை சந்தித்துள்ளனர். புயல் பாதிப்பால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory