» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்!

புதன் 14, பிப்ரவரி 2024 11:43:17 AM (IST)

தமிழக சட்டப்பேரவையில் ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கை 19-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானங்களை இன்று முன்மொழிந்தார்.

தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் பேசியது: "ஒரே நாடு ஒரே தேர்தலை கடுமையாக எதிர்க்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்திலிருந்து செல்லும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்க சதி செய்துள்ளனர். இதனை முறியடிக்க வேண்டும். இந்த இரண்டும் மக்களாட்சிக்கு எதிரானது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது முற்றிலும் நடைமுறைக்கு சாத்தியமற்றது. அரசியல் சட்டத்துக்கு எதிரானது. ஒரே தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைகளை முன்கூட்டியே கலைக்கும் சூழல் ஏற்படும். மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்தால் என்ன செய்ய முடியும். இதைவிட காமெடிக் கொள்கை வேறு இருக்காது. நாடாளுமன்ற தேர்தலைகூட ஒரே கட்டமாக நடத்த முடியாத சூழல் தான் உள்ளது. உள்ளாட்சிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிலையில், அதற்கும் தேர்தல் நடத்தப்போவதாக கூறுவது மாநில உரிமைகளை பறிப்பதாகும்.

தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழக உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் சூழ்ச்சி உள்ளது. மக்கள் தொகையின்படி தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கு பரிசாக அமையும். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் தொகை கணக்கின்படி தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும். அனைத்து மாநிலங்களிலும் மக்கள் தொகை கட்டுப்படுத்துவதை தீவிரமாக மேற்கொள்ளும் வரை தொகுதிகளின் எண்ணிக்கை இப்படியே தொடர வேண்டும்.” எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவாதம் தொடங்கியது. தமிழக வாழ்வுரிமை கட்சிதலைவர் வேல்முருகன் தீர்மானத்தை ஆதரித்து பேசினார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது தீர்மானத்தை எதிர்த்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory