» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இ.பி.எஸ்., உதவியாளர் வீட்டில் கொள்ளை முயற்சி: தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கைது

புதன் 14, பிப்ரவரி 2024 7:59:45 PM (IST)

நாமகிரிப்பேட்டை அருகே முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் வீட்டில் கொள்ளை அடிக்க முயன்றதாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள நாரைக்கிணறு பகுதியை சேர்ந்தவர் அருண் பிரகாஷ் (வயது 32). இவர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக இருந்து வருகிறார். இவருடைய தோட்டத்தில் உள்ள வீட்டில் மனைவி அருள் பிரியா (30), தந்தை செல்வகுமார் (60), தாய் விஜயலட்சுமி (55) ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இவர்களது வீட்டுக்கு கடந்த 9-ந் தேதி இரவு 2 கார்களில் 8 பேர் கொண்ட கும்பல் வந்தது. பின்னர் மர்ம கும்பல் வீட்டுக்குள் செல்வதற்காக அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை உடைத்ததுடன், இரும்பு கேட்டை கடப்பாரை, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் உடைத்து உள்ளே செல்ல முயன்றது. சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த அருள் பிரியா வெளியே வந்தார். அப்போது அவர் மர்ம நபர்களை கண்டு கூச்சல் போடவே அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து ஆயில்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் மற்றும் ஆயில்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதோடு, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையர்களை கண்டுபிடிக்க ராசிபுரம் டிஎஸ்பி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுகவனம், ராஜேஷ், செல்வராஜ் ஆகியோர் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டது. 

இந்த நிலையில் ராசிபுரம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் கார் ஒன்று நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காரின் எண்ணும் சந்தேகப்படும்படியாக நின்ற காரின் எண்ணும் ஒன்றாக இருப்பதை அறிந்தனர். பின்னர் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று காரை சுற்றிவளைத்தனர்.

இதையடுத்து காருக்குள் இருந்தவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே தேரியூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார் டிரைவர் முருகானந்தம் (48), உடன்குடி தேரியூர் வடக்கு தெருவை சேர்ந்த சுயம்புலிங்கம் (25), அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் (31), ஜெபக்குமார் (24), உடன்குடி காமராஜர் நகரை சேர்ந்த பார்வதி முத்து (25) என்பதும், இவர்கள் 5 பேரும் பிரகாஷ் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்து ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory