» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவில் - பெங்களூர் ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்து சூப்பர் பாஸ்ட் ரயிலாக இயக்க கோரிக்கை!
சனி 10, ஆகஸ்ட் 2024 12:22:53 PM (IST)
நாகர்கோவில் பெங்களூர் ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்து சூப்பர் பாஸ்ட் ரயிலாக இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
குமரி மற்றும் நெல்லை பயணிகள் பயன்படும் விதத்தில் தகவல் தொழில்நுட்ப நகரம் பெங்களூர்க்கு தினசரி ரயில் சேவை 2014-ம் ஆண்டு முதல் நாகர்கோவிலிருந்து மதுரை, ஓசூர் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தென்மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த ரயில் தமிழகத்தில் உள்ள கடைசி மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என 11 மாவட்டங்கள் வழியாக பயணித்து இந்த 11 மாவட்ட பயணிகளுக்கு பெங்களுர் செல்லத்தக்க வகையில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மட்டுமே தமிழகத்தில் உள்ள அதிக பகுதி பயணிகள் பயன்படும் படியாக பெங்களூருக்கு இயக்கப்படும் ரயில் ஆகும்.
ஆகையால் இந்த ரயிலுக்கு மற்ற ரயில்களை காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தென்மாவட்ட பயணிகள் தொடர்ந்து வைக்கப்படுகின்றது. நாகர்கோவிலிருந்து பெங்களூருக்கு செல்லும் இந்த ரயில் பெங்களூர்க்கு காலையில் 9:10 மணிக்கு சென்று சேர்கிறது.
இவ்வாறு கால தாமதமாக செல்வதால் இந்த ரயிலில் செல்லும் பயணிகள் பள்ளி கல்லூரி, வேலைவாய்ப்பு என்று பல்வேறு பணிகள் நிமித்தம் செல்லும் பயணிகள் அரை நாள் விடுமுறை எடுக்க வேண்டியுள்ளது. மறுமார்க்கமாக இந்த ரயில் பெங்களூரில் இருந்து மாலை 5:15 மணிக்கு புறப்படுகிறது. இவ்வாறு சீக்கிரம் புறப்படுவதால் அலுவலக பணிகளை முடித்து இந்த ரயிலில் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது.
இந்த நாகர்கோவில் - பெங்களூர் தினசரி ரயில் புதிதாக திறக்கப்பட்ட சர் எம் விஸ்வேஸ்வரய்யா ரயில் முனையத்தில் இருந்து இயங்கி வருகிறது. இந்த ரயிலின் மொத்த பயண தூரம் 661 கி.மீ ஆகும். இதில் 292 கி.மீ தூரம் இருப்புப்பாதை இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் கிராசிங் இல்லாமல் இயங்கி வருகிறது. இது மட்டுமல்லாமல் ஒரு வழிபாதையாக உள்ள கரூர் -ராசிபுரம்-நாமக்கல் - சேலம் மார்க்கத்தில் எதிர் மார்க்கத்தில் போதிய ரயில்கள் இல்லாத காரணத்தால் கிராசிங் வேண்டி நிற்பது மிகவும் குறைவு ஆகும்.
நாகர்கோவில் முதல் திண்டுக்கல் வரை உள்ள பாதை இருவழிபாதையாக உள்ள காரணத்தால் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு வருகின்ற கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. தற்போது இந்த ரயில் சராசரியாக மணிக்கு 48 கி.மீ வேகத்தில் பயணம் செய்கிறது. இந்த வேகத்தை அதிகரித்து மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பயணம் செய்தால் சுமார் 11 மணி நேரத்தில் பெங்களுர் செல்ல முடியும்.
தற்போது பெங்களூரில் இருந்து நாகர்கோவில் மார்க்கம் பயணம் செய்யும் போது 50 கி.மீ தூரம் உள்ள பெங்களூரில் இருந்து ஓசூருக்கு 51 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது. ஆனால் மறுமார்க்கமாக நாகர்கோவிலிருந்து பெங்களூர் க்கு பயணிக்கும் போது அதே தூரத்தை கடக்க 2.05 மணி நேரம் எடுத்து கொள்கின்றன. இந்த ரயிலின் முனையம் பெங்களூரில் இருந்து மாற்றப்பட்டு சர் எம் விஸ்வேஸ்வரய்யா ரயில் முனையத்தில் இருந்து இயக்கப்படுவதால் முனைய இடநெருக்கடி பிரச்சனை இல்லை என்பதால் இந்த ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்வதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்பதை ரயில்வே அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாற்றம் செய்யும் போது நாகர்கோவில் மார்க்கம் கால அட்டவணை மாற்றம் செய்யாமல் நாகர்கோவில் புறப்படும் வந்து சேரும் கால அட்டவணை ணை அப்படியே வைத்து விட்டு பெங்களுர் புறப்படும் மற்றும் சேரும் கால அட்டவணை மாற்றம் செய்ய வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்து பெங்களூரில் இருந்து மாலை 6:30 மணிக்கு பிறகு புறப்படு மாறும் கால அட்டவணை அமைத்தும் மறுமார்க்கமாக பெங்களூர்க்கு காலை 7:00 மணிக்கு சென்று சேருமாறு கால அட்டவணை அமைத்து வேகத்தை அதிகரித்து பயண நேரத்தை கணிசமான அளவில் குறைத்து சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றம் செய்து இயக்க வேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். இவ்வாறு சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றம் செய்து இயக்கும் போது ரயில்வேதுறையின் வருவாயில் கணிசமான அளவில் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்மேலறம் நிறுத்தம் ரத்து
பெங்களுரில் உள்ள கார்மேலறம் ரயில் நிலையம் அருகில் சர்ஜாபூர் சாலை, சில்க் போர்டு, மாரத்தஹள்ளி, சுற்றிலும் தமிழர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தங்கியுள்ள மக்களுக்கு கார்மேலறம் ரயில்வே நிறுத்தம் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது.
தற்போது பெங்களூரில் உள்ள முனையம் மாற்றப்பட்டதால் இந்த ரயிலின் வழித்தடம் மாற்றப்பட்ட காரணத்தால் கார்மேலறம் ரயில் நிலையம் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு கார்மேலறம் ரயில் நிலையத்தில் நிறுத்தம் அனுமதிக்க வேண்டும் என்று பெங்களுர் வாழ் தமிழர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த ரயிலின் கால அட்டவணை மாற்றம் செய்ய இந்த தடத்தில் உள்ள அனைத்து எம்.பி களும் இணைந்து ரயில்வே அமைச்சருக்கு அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தால் வருகின்ற கால அட்டவணையில் இந்த ரயிலின் கால அட்டவணை கண்டிப்பாக மாற்றம் செய்யப்படும் என்பதில் ஐயமில்லை