» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.2.62 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!

செவ்வாய் 20, மே 2025 4:19:46 PM (IST)



தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.2.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஆய்வகக் கட்டடத்தினை தமிழக முதல் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத்தொடர்ந்து, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் குத்துவிளக்கேற்றி, கட்டடத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து பார்வையிட்டார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, இராணி மேரி கல்லூரி (தன்னாட்சி) வளாகத்திலிருந்து இன்று (20.05.2025), தூத்துக்குடி மாவட்டத்தில் உயர்கல்வித் துறை சார்பில் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.2.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஆய்வகக் கட்டடத்தினை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத்தொடர்ந்து, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஆய்வகக் கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி, கட்டடத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , இன்று காணொளிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு முழுவதும் உயர்கல்வித்துறையின் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 120 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைகள், விடுதிக் கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்து, 207 கோடியே 82 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்கல்வித்துறை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி சிறப்பித்துள்ளார்கள்.

அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களின் வசதிக்காக ரூ.2.62 கோடி செலவில் 4300 சதுரஅடி பரப்பளவில் தரைத்தளமும், 4300 சதுர அடி பரப்பளவில் முதல்தளமும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில், தரைத்தளம் மற்றும் முதல்தளத்தில் கட்டப்பட்டுள்ள 6 வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் ஒரு ஆய்வகக் கட்டடத்தினை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்கள். நமது தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியை பொறுத்தவரையில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் விரைவாக நிறைவடைந்துவிடும். அந்த அளவிற்கு ஒரு தரமான கல்லூரியாக செயல்பட்டுவருகிறது. ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர்களின் சேர்க்கை சதவீதம் 100 சதவீதத்தை எய்திவிடும்.

தமிழ்நாடு முதலமைச்சர் , மாணவ – மாணவிகளின் கல்வி செலவிற்காக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கக்கூடிய புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அனேக நிறுவனங்களில் தொழில்நுட்பக் கல்லூரி படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. மாணவர்கள் பாடப்பிரிவுகளில் ஏற்படும் எந்த ஒரு சந்தேகமாக இருந்தாலும் அதனை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுபடத்திக்கொண்டு கல்வி கற்க வேண்டும். மேலும், கல்வி பயிலும் போது மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின்கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும், எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. அங்கேயும் மாணவிகள் சேர்ந்து பயன்பெறலாம்.

அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு மாணவர்களிடம் இருக்கக்கூடிய தனி திறன்களை ஆராய்ந்து, தற்காலத்திற்கு ஏற்றார்போல் பல்வேறு திறன் பயிற்சிகளும், ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகிறது. எதிர்கால தலைவர்களாகிய இளைஞர்கள் ஒவ்வொருவரும் திறன் வாய்ந்தவர்களாக, அறிவாற்றல் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நோக்கமாகும். அதே போன்று அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களைப் பொறுத்தவரை கோரம்பள்ளம், வேப்பலோடை, நாகலாபுரம் மற்றும் திருச்செந்தூர் ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றார் போல் டாடா நிறுவனத்தின் மூலம் நவீன இயந்திரங்கள் நிறுவப்பட்டு, பயிற்சி பெற்ற பயிற்றுநர்கள் மூலம் மாணவ – மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

எனவே, மாணவ – மாணவிகள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயன்பெற்றுக்கொள்ளலாம். படித்து முடித்த பிறகு அவர்களின் நிறுவனத்திலே வேலைவாய்ப்பும் வழங்குகிறார்கள். எனவே, மாணவர்கள் இதுபோன்ற வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக்கொண்டு சிறந்த முறையில் கல்வி கற்று வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முத்துராசு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ – மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory