» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் பகுதியில் மேம்பாலம் கட்டப்படும்: எடப்பாடி பழனிச்சாமி உறுதி!

சனி 2, ஆகஸ்ட் 2025 3:11:59 PM (IST)



அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு பெற்று தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் பகுதியில் மேம்பாலம் கட்டப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலையொட்டி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தோடு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடியில் இன்று உப்பு உற்பத்தியாளர்கள், நிறுவனத்தார், கப்பல் தொழிலளார்கள், மீன்பிடி தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.

அ.தி.மு.க. ஆட்சியின்போது தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கப்பணிக்காக 250 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பின்னர் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் தி.மு.க. அரசும், நிலம் ஒதுக்கீடு செய்தது. இதற்கு முழு காரணம் அ.தி.மு.க. தான். தொழில் நகரமான தூத்துக்குடியில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சி அமைந்தததும் அதற்கான பணியை செய்வோம்.

தூத்துக்குடியில் போக்குவரத்து அதிகளவு உள்ளதால் வி.வி.டி. சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற வழக்கு காரணமாக அது நிலுவையில் உள்ளது. ஆனால் இதற்கு தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு பெற்று வி.வி.டி. சிக்னல் பகுதியில் மேம்பாலம் கட்டப்படும்.

பனைத்தொழிலாளர்களுக்கு அரசு உதவி, உப்பளத்தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும். கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நான்தான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தேன். அப்போது கிராமம், நகரம் என அனைத்து இடங்களிலும் தரமான சாலை அமைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தியாவிலேயே தார்சாலைகள் அதிக நீளமுடையது தமிழ்நாட்டில் தான் என்ற நிலையை கொண்டு வந்தோம். எங்களது ஆட்சி காலத்தில் மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துறை மந்திரியாக இருந்த நிதின்கட்கரியிடம் பேசி தூத்துக்குடி துறைமுகம் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படியே தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டது.

அதேபோல் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்காகவும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் பல்வேறு சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில் 12 சாலைகளுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு நிலம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதைபோல பல்வேறு சாலைகள் வர அ.தி.மு.க. ஆட்சி தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory