» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூய்மை பணியாளர்களுக்கு தினசரி 3 வேளை உணவு வழங்கும் திட்டம்: தமிழக அரசு அனுமதி!

வியாழன் 23, அக்டோபர் 2025 4:50:54 PM (IST)

தூய்மை பணியாளர்களுக்கு தினசரி 3 வேளை இலவச உணவு  வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

தூய்மை பணியாளர்களின் நலனை காக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தூய்மை பணியாளர்களின் நலவாரியம் சிறப்பாக செயல்படுவது அரசால் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அதனுடன், தூய்மை பணியாளர்களுக்கு தினசரி இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு இன்று அனுமதி அளித்து உள்ளது. இதனையடுத்து, அவர்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கப்படும். அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் 3 வேளையும் இலவச உணவு வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதேபோன்று தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு நல திட்டங்களையும் அரசு அறிவித்து உள்ளது. இதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆகஸ்டு மத்தியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கூடி முடிவு செய்யப்பட்டது. இதன்படி, தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால், அதற்கு சிகிச்சை அளிக்க தனித்திட்டம் செயல்படுத்தப்படும்.

பணியின்போது மரணம் அடையும் தூய்மை பணியாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் சுய தொழில் தொடங்கும்போது அவர்களுக்கு ரூ.3.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதற்கென ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கான புதிய உயர் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு 30 ஆயிரம் புதிய குடியிருப்புகள் கட்டி தரப்படும். கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தூய்மை பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் இலவச காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும். தூய்மைப்பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் கட்டணமின்றி வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும். அதன்பின் படிப்படியாக மற்ற நகர்ப்புற, உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரிவுப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory