» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டத்தில் 40 புதிய மகளிர் விடியல் பேருந்துகள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
திங்கள் 8, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.17.60 கோடி மதிப்பில் 40 புதிய மகளிர் விடியல் பேருந்துகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி கோட்டம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் ரூ.17.60 கோடி மதிப்பில் 40 புதிய மகளிர் விடியல் பேருந்துகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், வடசேரி பேருந்துநிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து துவக்கிவைத்து தெரிவிக்கையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுபோக்குவரத்தினை மேம்படுத்தி கிராம நகர்புற மக்கள் அனைவரும் எளிதாக பயன்படுத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் போக்குவரத்து துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் கேட்கின்ற தொகை இல்லாமல் கேட்காத தொகையும் தருகிறார்கள். இந்த மாவட்ட அமைச்சர் என்ற முறையில் 247 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைக்கின்ற பெருமையை பெற்றுள்ளேன். இது போன்ற கூண்டு கட்டிய பேருந்துகள் 117 ஆக மொத்தம் 364 பேருந்துகள் அதற்கான தொகை 134 கோடி ரூபாய் பேருந்துகளை புதிதாகவும் புதுப்பிப்பதற்காகவும் கொடுத்துள்ள அரசுதான் இந்த திராவிட மாடல் அரசு என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட மாடல் அரசு என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான அரசு. தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இங்கே இருக்கும் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சாஸ்திரமும் சகோதரத்துவம் என்பது அரசியலமைப்பு சட்ட புத்தகங்களின் பக்கங்களில் மட்டும்தான் பல மாநிலங்களில் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் அது செயல்பாட்டிலும் இருக்கக்கூடிய சூழல் இருக்கிறது.
இந்திய துணை கண்டத்தின் பூர்வ குடிமக்கள் நாம். சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கி கீழடி நாகரிகம் வரை அத்தனைக்கும் சொந்தக்காரர்கள் நாம். உலகம் போற்றுகின்ற இலக்கியங்களை அய்யன் வள்ளுவன் ஏற்றிய உலக பொதுமறை தொடங்கி அத்தனையும் படைத்தவர்கள் நம் முன்னோர்கள். மக்களின் நலனுக்காக கோடான கோடி திட்டங்களை தந்து மக்களின் உள்ளத்தில் குடி கொண்டிருக்கக் கூடிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்துவதற்கு என்றைக்கும் நீங்கள் துணை நிற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 418 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்த திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து சிவாலயங்கள் முக்கியமான கோயில்கள் அத்தனைக்கும் கோடான கோடி பணத்தை செலவழித்து அவற்றிற்கு குடமுழுக்கு நடத்தி இன்றைக்கு பக்தர்கள் எல்லாம் பரவசம் ஊட்டுகின்ற நிலைக்கு ஒரு அரசு செயல்பட்டு இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாறு திரும்பத் திரும்ப உங்களுக்கு சொல்கிறேன் அது இந்த திராவிட மாடல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே இந்த அரசுக்கு கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அனைவரும் என்றைக்கும் நன்றி கடன் பட்டவர்களாக நாம் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு நமக்கு பல்வேறு பணிகளை செய்து வருகிறது இன்னும் அந்த பணிகள் தொடரும் என அரசின் சார்பில் உங்களுக்கு தெரிவித்துக் கொண்டு இந்த மகளிர் விடியல் பேருந்துகளை துவக்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திலி) லிட்., நாகர்கோவில் மண்டலத்தில் பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு 438 நகர பேருந்துகளும் 298 புறநகர் பேருந்துகளும் என மொத்தம் 736 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்துகளில் நாளொன்றுக்கு சுமார் 10.30 இலட்சம் மக்கள் பயணம் செய்து வருகின்றனர். நாகர்கோவில் மண்டலத்தில் இயக்கப்படும் 438 நகர பேருந்துகளில் 366 நகர பேருந்துகள் ”மகளிர் விடியல் பயண பேருந்துகளாக” இயக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 07.05.2021 முதல் ஆரம்பிக்கப்பட்ட முத்தான இத்திட்டத்தில் நாகர்கோவில் மண்டல பேருந்துகளில் நாளொன்றுக்கு சுமார் 3.59 லட்சம் மகளிர் கட்டணமில்லாமல் தினந்தோறும் மகிழ்ச்சியுடன் பயணம் செய்கின்றனர். மேலும் சுய உதவிக்குழுக்களுக்கு சுமார் 25 கிலோ எடை உள்ள பொருட்களை நகர பேரூந்துகளில் இலவசமாகவும், புறநகர் பேரூந்துகளில் 100 கி.மீ வரை இலவசமாகவும் கொண்டு செல்லலாம். மேலும் நகர்புற பேருந்துகளில் விருப்பம்போல் பயணம் செய்ய மாதாந்திர சலுகை பயணச்சீட்டு (ரூ.1000) வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட இத்திட்டங்கள் பெண்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் திருநெல்வேலி கோட்டம் பேருந்துகளில் மாநிலத்திலேயே தினமும் 76 சதவீதத்திற்கும் அதிகமாக பெண்கள் கட்டணமில்லா பயணம் செய்து சாதனை படைத்துள்ளனர். இத்திட்டங்களின் வாயிலாக பணிபுரியும், சுய தொழில் புரியும் மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்டோர்கள் நாகர்கோவில் மண்டல பேருந்துகளில் இந்நாள்வரை சுமார் 52.70 கோடிக்கு மேல் பயண நடைகள் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முள்ளுர்துறை – தேங்காய்பட்டணம் துறைமுகம், நாகர்கோவில் – குளச்சல், நாகர்கோவில் – இராஜாக்கமங்கலம் துறை, நாகர்கோவில் – ஈத்தாமொழி, நாகர்கோவில் – பிள்ளைதோப்பு, நாகர்கோவில் – தேங்காய்பட்டணம், நாகர்கோவில் – கன்னியாகுமரி ஆகிய 7 வழித்தடங்களில் பேரூந்துகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் பொது போக்குவரத்தினை பயன்படுத்த வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான நல்ல ஆட்சியில் எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து பகுதி மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் வளர்ச்சி திட்ட பணிகள் மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), ராஜேஷ் குமார் (கிள்ளியூர்), முனைவர் தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) மேலாண்மை இயக்குநர் செ.நடராஜன், நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் பா.பாலசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு துறை கூடுதல் இயக்குநர் (போக்குவரத்து) தமிழ் இனியன், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் ஜவஹர், நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் கலாராணி, தொழிற்சங்க பிரதிநிதிகள் சிவன் பிள்ளை, தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் பூதலிங்க பிள்ளை, உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்குவரத்து அலுவலர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்கள் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்: ஆட்சியருடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வாக்குவாதம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 5:07:32 PM (IST)

தமிழகத்தில் ரூ.69 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்!
திங்கள் 8, டிசம்பர் 2025 5:02:03 PM (IST)

முக்தாரை கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் : சரத்குமார் எச்சரிக்கை!
திங்கள் 8, டிசம்பர் 2025 4:03:30 PM (IST)

நீதிபதி தீர்ப்பிற்கு எதிராக கோஷம் எழுப்பிய தி.மு.க எம்.எல்.ஏ மகன்: விமான நிலையத்தில் பரபரப்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 11:25:39 AM (IST)

குமரி பேராயர் கிறிஸ்டோபர் விஜயன் பதவியேற்பு விழா : பிரதம பேராயர் ரூபன் மார்க் பங்கேற்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 10:37:57 AM (IST)

நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனத்தில் ரூ. 888 கோடி ஊழல் : அன்புமணி குற்றச்சாட்டு!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:25:22 AM (IST)


