» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இலங்கைக்கு ரூ.1 கோடி யானை தந்தங்கள் கடத்த முயற்சி: தூத்துக்குடி வாலிபர் உள்பட 3 பேர் கைது

செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:26:06 AM (IST)

கீழக்கரை அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தூத்துக்குடி வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட கடல் பகுதி வழியாக இலங்கைக்கு மஞ்சள், கஞ்சா, கடல் அட்டைகள், கடல் குதிரைகள், பீடி, பீடி இலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கடத்தல்காரர்கள் கடத்தி செல்லும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகின்றன. குறிப்பாக கீழக்கரை, வாலிநோக்கம், மண்டபம், ராமேசுவரம் போன்ற கடல் பகுதி வழியாக கடத்தல் சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த கடலோர காவல் நிலையங்கள் மூலம் சிறப்பு காவல் படை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கீழக்கரை கடற்கரை காவல் சரகம் மீனவர் குப்பம், கிழக்கு புது நகர், சிவகாமிபுரம், கீழக்கரை கடற்கரை ஆகிய பகுதிகளில் இன்ஸ்பெக்டர் ஜான்சி ராணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், நுண்ணறிவு தலைமை காவலர் மதியழகன், தலைமை காவலர் திருத்தணிகைவேலன், முதல் நிலை காவலர் சுரேந்தர் சிங் ஆகியோர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கீழக்கரை கடற்கரை மாதா கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர்.

இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த காதர் பாட்ஷா(வயது 27), சாயல்குடி ஹரி குமார் (29), வாலிநோக்கம் காவா குளத்தை சேர்ந்த ஸ்ரீராம் (26) என்பதும், அவர்கள் வைத்திருந்த பையில் 2 யானை தந்தங்கள் இருந்ததும் தெரியவந்தது.

மேலும் இந்த தந்தங்களை இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி என கூறப்படுகிறது. இதையடுத்து மேற்கண்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 3 கிலோ 900 கிராம் எடை உள்ள யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory