» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடக்கம்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்

திங்கள் 5, ஜனவரி 2026 4:18:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது.

மாநிலத்தில் பாரத்நெட் பணிகள் சுமார் 95% வரை நிறைவடைந்துள்ளன. தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்து, தடையில்லா இணைய சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாவட்டமும் வருவாய் உட்கோட்டம் (Revenue Division) அடிப்படையில் 2 முதல் 6 வட்டாரங்களை கொண்ட துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பதாரர் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார். அந்த மாவட்டங்கள், நிறுவனம்/நிறுவனத்தின் வணிகச் செயல்பாட்டுப் பகுதி அமைந்துள்ள மாவட்டம் மற்றும்/அல்லது தனிப்பட்ட விண்ணப்பதாரரின் முகவரி அமைந்துள்ள மாவட்டமாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் தொழில் பங்கீட்டாளர்களின் முக்கிய பொறுப்புகளில், Optical Fibre Cable (OFC) மற்றும் Optical Network Terminal (ONT) பராமரிப்பு, தடையில்லா இணைய சேவை வழங்குதல், OFC பராமரிப்பு பணிகள், சேவை தடைகளை காலதாமதமின்றி சரிசெய்தல், Service Level Agreement (SLA) விதிமுறைகளை பின்பற்றுதல் மற்றும் சேவை கிடைப்புத் தரத்தை பராமரித்தல் ஆகியவை அடங்கும்.

விண்ணப்ப பதிவு நடைமுறை TANFINET இணையதள போர்டல் (https://tanfinet.tn.gov.in) மூலம் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு மற்றும் தொடர்புடைய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, தாங்கள் செயல்பட விரும்பும் துணைப் பிரிவு-ஐ(Division) தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு துணைப் பிரிவுக்கும் ₹25,000/- (திரும்பப்பெறக்கூடிய, வட்டியில்லா) விண்ணப்ப பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் பங்கீட்டாளர்கள், ஒவ்வொரு வட்டாரங்களுக்கும் ₹2,00,000/-பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்திய பின்னர், TANFINET தலைமையகத்தால் பணி ஆணை (Work Order) வழங்கப்படும்.

இந்த நோக்கத்திற்கான TANFINET விண்ணப்ப இணையதள இணைப்பு (https://tanfinet.tn.gov.in) 01.01.2026 முதல் 14.01.2026 வரை செயல்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் செய்வது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் Toll Free Number 044 - 24965595 தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory