» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
வெள்ளி 6, மார்ச் 2026 12:10:41 PM (IST)
திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், இன்று (வெள்ளிக்கிழமை) சனிப்பெயர்ச்சி விழா மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பாடல் பெற்ற தலமாகவும், உன்மத்த நடனமாடும் செண்பக தியாகராஜர் அருள்பாலிக்கும் தலமாகவும், நளச்சக்கரவர்த்திக்கு சனி தோஷ விமோசனம் கிடைத்த தலமாகவும் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டது இத்தலம். இங்குச் சனிபகவான் ‘அனுக்கிரக மூர்த்தியாக’ (அருள்பாலிப்பவராக) வீற்றிருப்பது தனிச்சிறப்பாகும்.
சனி கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர இரண்டரை முதல் இரண்டே முக்கால் ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. அந்த வகையில், கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இன்று காலை 8:24 மணிக்கு சனிபகவான் பிரவேசித்தார். இந்தச் சுப நிகழ்வைக் குறிக்கும் வகையில், மங்கள வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை காட்டப்பட்டது.
முன்னதாக, சனிபகவானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், பழங்கள், பஞ்சாமிர்தம், தேன், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் சுவாமிக்கு மலர் மாலைகள் சூட்டப்பட்டு, தங்க அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனைகள் செய்யப்பட்டன.
தோஷ நிவர்த்திக்காகப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே பிரசித்தி பெற்ற நளன் குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து சனீஸ்வர பகவானைத் தரிசித்தனர். பக்தர்கள் வசதிக்காகக் கட்டணமில்லா தரிசனம் மற்றும் ரூ.300, ரூ.600, ரூ.1,000 ஆகிய சிறப்புத் தரிசன வரிசைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இந்த விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன், மாவட்ட ஆட்சியர் இஷிதா ரதி, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது : தூத்துக்குடியில் செல்வப்பெருந்தகை பேட்டி
வெள்ளி 6, மார்ச் 2026 4:12:44 PM (IST)

ஆல் பினிஷ்: சட்டம்- ஒழுங்கு கைமீறி போய் விட்டதா? முதல்வருக்கு ராமதாஸ் கேள்வி!
வெள்ளி 6, மார்ச் 2026 3:49:03 PM (IST)

மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 12:48:47 PM (IST)

குமரி பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று அதிக வருவாய் பெறும் அந்தியோதயா ரயில்
வெள்ளி 6, மார்ச் 2026 12:27:09 PM (IST)

