» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
திங்கள் 23, மார்ச் 2026 5:18:11 PM (IST)
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள் என்று மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது..
நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவல்துறையினரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் அதே பகுதியில் கைப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது, கடையைத் தாமதமாக அடைத்ததாகக் கூறி இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதில் தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு, சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன்னிலையில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. சிபிஐ தரப்பு வழக்கறிஞர் விஜயன் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் தரப்பு வழக்கறிஞர்களின் இறுதி வாதங்கள் அனைத்தும் அண்மையில் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து, சிறையில் இருந்த 9 போலீசாரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி முத்துக்குமரன் தனது தீர்ப்பை வாசித்தார்.
நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்: "ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தாக்கியதால்தான் காயம் ஏற்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. உயிரிழந்த ஜெயராஜுக்கு இதயம் மற்றும் நுரையீரல் சார்ந்த உபாதைகள் இருந்தபோதிலும், அவர் நோய் காரணமாக உயிரிழக்கவில்லை.
கம்பி போன்ற ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியதால்தான் இருவரும் உயிரிழந்தனர் என உடற்கூராய்வு அறிக்கையில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் உத்தரவின்பேரில்தான் மற்ற காவலர்கள் தாக்கியுள்ளனர். கைகளைக் கயிற்றால் கட்டித் தொங்கவிட்டுத் தாக்கியிருப்பது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது.
இரவு முழுவதும் இடைவெளி விட்டு விட்டு காவல்துறையினர் இருவரையும் தாக்கியுள்ளனர். 'தந்தை, மகனை வைத்து அடித்துப் பழகலாம்' எனக் காவல்துறையினர் தங்களுக்குள் பேசிக்கொண்டது சிபிஐ குற்றப்பத்திரிகையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் ‘துரந்தர் 2’ படத்தைத் தடை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
திங்கள் 23, மார்ச் 2026 5:04:07 PM (IST)

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 ஒதுக்கீடு!
திங்கள் 23, மார்ச் 2026 4:13:03 PM (IST)

வெற்றி பெற வேண்டி குவியும் அரசியல் பிரமுகர்கள் : களைகட்டும் திருச்செந்தூர் முருகன் கோயில்!
திங்கள் 23, மார்ச் 2026 3:44:24 PM (IST)

அனைவரும் திருப்தியடையும் வகையில் தொகுதிப் பங்கீடு அமையும்: பியூஷ் கோயல் உறுதி!
திங்கள் 23, மார்ச் 2026 12:41:53 PM (IST)

மதுபோதையில் மயங்கிய கேட் கீப்பர்கள்: நடுவழியில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்!
திங்கள் 23, மார்ச் 2026 12:39:34 PM (IST)

பாஜக தலைமை மீது சரத்குமார் அதிருப்தி: அடுத்தகட்ட முடிவை அறிவிப்பதாக எச்சரிக்கை
திங்கள் 23, மார்ச் 2026 12:12:38 PM (IST)

