» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுபான்மையின தொண்டு நிறுவனங்களைக் குறிவைப்பதா? - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்!

வியாழன் 2, ஏப்ரல் 2026 12:01:05 PM (IST)

கிறித்தவத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற மதச் சிறுபான்மையின அமைப்புகளை முடக்கும் நோக்கில் கொண்டு வரப்படவுள்ள 'வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாகத் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "ஒன்றிய பாஜக அரசால் முன்மொழியப்பட்டுள்ள 'வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டமுன்வரைவு, 2026' என்பது முழுக்க முழுக்க கிறித்தவத் தொண்டு நிறுவனங்கள், தேவாலயங்கள் மற்றும் பிற மதச் சிறுபான்மையின அமைப்புகளைக் குறிவைத்துத் தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் ஆகும்.

ஏற்கனவே வக்பு வாரியச் சட்டத்திருத்தம் மூலம் இஸ்லாமியச் சொத்துகளைக் கபளீகரம் செய்ய முயன்ற பாஜக அரசு, தற்போது மற்ற மதச் சிறுபான்மையின அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கடுமையான போராட்டத்தாலும், கேரளாவில் தேர்தல் நடைபெற இருப்பதாலும் தற்போது தற்காலிகமாகப் பின்வாங்குவது போல பாஜக அரசு நடிக்கிறது. ஆனால், விரைவில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டி, இந்தச் சட்டத்திருத்தத்தை அவசர அவசரமாக நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஜனநாயகத்திற்கு எதிரான இத்தகைய முயற்சிகளைக் கைவிட்டு, பிரதமர் அவர்கள் இந்தத் தன்னிச்சையான மற்றும் அநியாயமான சட்டத்திருத்தத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory