» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இரு குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை: ஆயுள் தண்டனை கைதிக்கு சாகும் வரை சிறை...!

வியாழன் 2, ஏப்ரல் 2026 8:18:30 AM (IST)

தூத்துக்குடியில் 10 வயதுச் சிறுமி மற்றும் 8 வயதுச் சிறுவனுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில், ஏற்கனவே கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுச் சிறையிலுள்ள குற்றவாளிக்கு, தற்போது சாகும் வரை சிறை தண்டனை விதித்துப் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 10 வயதுச் சிறுமி மற்றும் 8 வயதுச் சிறுவன் ஆகிய இரு குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக, தூத்துக்குடியைச் சேர்ந்த சின்னத்தம்பி (எ) லம்பா (34) என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிரமாக விசாரணை செய்து, நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய நீதிபதி திருமதி. பிரீத்தா அவர்கள் நேற்று (01.04.2026), சின்னத்தம்பி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவருக்குப் சாகும் வரை வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.  பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளுக்கும் அரசு நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்சம் ரூபாய் (மொத்தம் 10 லட்சம்) இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

குற்றவாளி சின்னத்தம்பி (எ) லம்பா, ஏற்கனவே கடந்த 2022-ஆம் ஆண்டு தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர். அந்த வழக்கில் கடந்த 2025-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்திருந்தது. தற்போது அவர் சிறையில் உள்ள நிலையில், இந்த போக்சோ வழக்கில் 'சாகும் வரை சிறை' என்ற கூடுதல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கில் சாட்சிகளைச் சரியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தித் தண்டனை பெற்றுத் தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில், வழக்கைத் திறம்படப் புலனாய்வு செய்த அப்போதைய காவல் ஆய்வாளர்கள் சாந்தகுமாரி, ராமலெட்சுமி, அரசுத் தரப்பில் சிறப்பாக வாதிட்ட வழக்கறிஞர் ஜுடு ஏஞ்சலோ மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர்கள் சமுத்திரகனி, ரபிலாகுமாரி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் பாராட்டியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory