» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9பேருக்கும் இரட்டை மரண தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 6, ஏப்ரல் 2026 6:00:17 PM (IST)
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்களுக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக அங்கு உள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சமயத்தில் அவர்கள் இருவரும் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த இரட்டைக் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடக்கிறது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என கடந்த 23-ந்தேதி நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
அதன்படி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள 9 போலீஸ்காரர்களும் இன்று மாலை தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டது. அதில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட காவல்துறையினர் 9பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தீர்ப்பு விபரம்
இந்த வழக்கில் முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு இரட்டை மரண தண்டனையுடன் 21 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.84,10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றவாளியான உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனுக்கு இரட்டை மரண தண்டனை, 8 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.84,10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது குற்றவாளியான சார்பு ஆய்வாளர் ரகு கணேஷிற்கு இரட்டை மரண தண்டனை, 18 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.52,00,000 அபராதமும், நான்காவது குற்றவாளியான தலைமை காவலர் முருகனுக்கு இரட்டை மரண தண்டனை, 11 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50,00,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐந்தாவது குற்றவாளியான காவலர் சாமதுரைக்கு இரட்டை மரண தண்டனை, 8 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.2,25,000 அபராதமும், ஆறாவது குற்றவாளியான தலைமை காவலர் முத்துராஜிற்கு இரட்டை மரண தண்டனை, 11 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.32,00,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஏழாவது குற்றவாளியான காவலர் செல்லதுரைக்கு இரட்டை மரண தண்டனையுடன் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எட்டாவது குற்றவாளியான தலைமை ஆய்வாளர் தாமஸ் பிரான்சிஸிற்கு இரட்டை மரண தண்டனை, 11 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.40,46,000 அபராதமும், ஒன்பதாவது குற்றவாளியான காவலர் வெயிலுமுத்துவுக்கு இரட்டை மரண தண்டனையுடன் 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. பத்தாவது குற்றவாளியான சிறப்புத் துணை ஆய்வாளர் பால்துரை ஏற்கனவே இறந்துவிட்டதால் அவருக்குத் தண்டனை ஏதும் அறிவிக்கப்படவில்லை.
காவல்துறை அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பொதுமக்களைத் துன்புறுத்தியவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடமாக அமையும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்தினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தங்களுக்கு நீதி கிடைத்துள்ளதாகத் தெரிவித்தனர். இத்தீர்ப்பை ஒட்டித் தூத்துக்குடி மற்றும் சாத்தான்குளம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மக்கள்Apr 6, 2026 - 06:12:32 PM | Posted IP 172.7*****
இது சூப்பர் தண்டனை , அடுத்து ஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பாவி மக்களை சுட்டு கொன்ற காவலர்களுக்கு எப்போ?
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் ஏப். 15ல் பிரதமருடன் பிரசாரம் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
திங்கள் 6, ஏப்ரல் 2026 5:39:23 PM (IST)

நான் ஆட்சிக்கு வந்தால் மெரினா நினைவிடங்களை அகற்றுவேன்: சீமான் ஆவேசப் பேச்சு
திங்கள் 6, ஏப்ரல் 2026 5:25:10 PM (IST)

தமிழக சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு : களம் காணும் முக்கியத் தலைவர்கள்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 5:10:39 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ராஜினாமா : மேரி பிரின்சி லதா பொறுப்பு மேயராக நியமனம்
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:33:05 PM (IST)

காதலி பேசாததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை: மார்த்தாண்டம் அருகே சோகம்
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:22:09 PM (IST)

மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு மூதாட்டி கொலை வழக்கு ஜாமீன் ரத்து!
திங்கள் 6, ஏப்ரல் 2026 3:43:23 PM (IST)


திருபுவனம்Apr 6, 2026 - 06:43:14 PM | Posted IP 172.7*****