» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக கூட்டணிக் கட்சி முகவர்கள் மிகுந்த விழிப்புடன் பணியாற்ற வேண்டும்: இபிஎஸ் வேண்டுகோள்!

சனி 25, ஏப்ரல் 2026 3:36:21 PM (IST)

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி முகவர்கள் மிகுந்த விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழகத்தில் நல்லாட்சி மலர வேண்டும் என்பதற்காக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்து, தமிழக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக அதிகமான வாக்குப்பதிவை உறுதி செய்த வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போது நடைபெற்று வரும் திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பை நாம் கண்கூடாகக் கண்டோம். விரக்தியின் விளிம்பில் உள்ள திமுகவினர், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்டு இந்தத் தேர்தலிலும் முறைகேடுகளில் ஈடுபடத் தயாராக உள்ளனர்.

முகவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்:

வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி முகவர்கள் வெற்றிக் கனியைச் சிந்தாமல், சிதறாமல் பெற்றிடப் பின்வரும் அம்சங்களைக் கவனத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும்:

நேரம் தவறாமை: வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே அடையாள அட்டையுடன் மையங்களுக்குச் செல்ல வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் காலதாமதம் செய்யக்கூடாது.

வெளியேறக் கூடாது: ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து, தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை எக்காரணத்தைக் கொண்டும் மையத்தை விட்டு வெளியே வரக்கூடாது.

இயந்திரங்களைச் சரிபார்த்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள சீல்கள் (Seals) முறையாக உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். இயந்திரத்தில் பதிவான வாக்குகளும், படிவம் 17C-இல் உள்ள வாக்குகளும் சரியாக உள்ளனவா என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இயந்திரத்தின் தேதி மற்றும் நேரத்தையும் சரிபார்க்க வேண்டும்.

தபால் வாக்குகள்: தபால் வாக்குகள் எண்ணப்படும் போது மிகவும் கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.

முறைகேடுகளைத் தடுத்தல்: ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அறிவிக்கப்படும் வாக்குகள் சரியாக உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும். ஏதேனும் மாறுதல்கள் இருந்தால், உடனடியாகத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட வேண்டும். வேட்பாளரின் தலைமை முகவர் (Chief Agent) மூலம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்து, அதற்குரிய ஒப்புகையைப் பெற வேண்டும். தீர்வு கிடைத்த பின்னரே அடுத்த சுற்று எண்ணிக்கையைத் தொடங்க அனுமதிக்க வேண்டும்.

"தீயசக்தியைத் தடுத்து நிறுத்துவோம்”

திமுகவினர் வதந்திகளைப் பரப்புவதிலும், தில்லுமுல்லு செய்வதிலும் கைதேர்ந்தவர்கள். எனவே, வாக்கு எண்ணும் மையங்களில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது துஷ்பிரயோகங்கள் நடந்தால், உடனடியாக மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மக்களின் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையில் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். தமிழக மக்களைக் காக்க, தீயசக்தியான திமுக மீண்டும் தலையெடுத்துவிடாமல் தடுத்து நிறுத்துவோம். இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory