» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஞாயிறு 26, ஏப்ரல் 2026 8:20:15 PM (IST)



முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கோடை விடுமுறை மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

சிறந்த பரிகாரத் தலமாகவும், கடற்கரையில் அமைந்துள்ள ஆன்மீகச் சுற்றுலாத் தலமாகவும் விளங்கும் திருச்செந்தூருக்குத் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது கோவிலில் மெகா திட்ட வளாகப் பணிகள் நிறைவு பெற்று, திருப்பதிக்கு இணையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் பக்தர்களின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது.

கோவிலில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய 10 நாள் சித்திரை வசந்த திருவிழா தற்போது விமரிசையாக நடைபெற்று வருகிறது. இன்று 5-ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு, மாலையில் சுவாமி ஜெயந்தி நாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைக்குப் பின்னர், சுவாமி தங்கத் தேரில் எழுந்தருளி கிரி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.

பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், இன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதாலும் அதிகாலையிலிருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கடலில் புனித நீராடியும், நாழிக்கிணற்றில் நீராடியும் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகே மூலவரைத் தரிசிக்க முடிந்தது.

கோவில் நடை வழக்கம்போல் அதிகாலை 4 மணிக்குத் திறக்கப்பட்டு விஸ்வரூபம் மற்றும் உதய மார்த்தாண்ட அபிஷேகம் உள்ளிட்ட கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. பக்தர்களுக்கு வசதியாக நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory